மனதில் நின்ற சில நினைவுகள் 6

                                                         இக்கரைக்கு அக்கரை

‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்ற பழமொழி நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் எல்லோர் வாழ்விலும் இந்த விஷயத்தில் ஒரு முறையாவது மாட்டாமல் இருந்திருக்க மாட்டோம் . வீட்டு சாப்பாட்டை எப்போதும் சாப்பிடுபவர், திடீரென்று ஹோட்டல் சாப்பாட்டை ரசிப்பவராக மாறுவதும், ஹோட்டல் சாப்பாட்டிலேயே வாழ்வைக் கழிப்பவர்கள் வீட்டு உணவுக்கு ஏங்குவதும் நீண்ட நாள் நியதியாக உள்ளது என்றால் நீங்கள் மறுக்க முடியாது. பிறந்தது முதல் வீட்டு உணவைத் தவிர வேறொன்றும் அறியாத பிறவியான எனக்கு, முதன் முதலில் 1967 இல் ஒரு கிராமத்தில் நாங்கள் குடியேறியபோது, என அண்ணன் அந்த ஊர் ‘பத்ம விலாஸ்’ ஹோட்டலில் வாங்கித் தந்த பூரி கிழங்கும் மெல்லிய முறுகல் தோசையும் தேவாமிர்தமாகப் பட்டதில் வியப்பேதும் இல்லை. பிறகு நாங்கள் ஒரே நாளில் வீட்டில் செட்டில் ஆனதும், அந்த வாய்ப்பு மீண்டும் மூன்று வருடங்களுக்கு கிடைக்கவில்லை. பின்னர் திருச்சிக் கல்லூரியில் சேர்ந்து, முதல் சில வாரங்கள் ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருக்க நேர்கையில், மீண்டும் ஹோட்டல் அனுபவம் நேரிட்டது. ஸ்பெஷல் முறுகல் தோசையும், கெட்டி தேங்காய் சட்னியும் சாப்பிடும் பாக்கியம் கிடைத்தது. பின்னாளில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பின்னர் அவ்வப்போது ஹோட்டல் விஜயம் தவிர்க்க முடியாததாய்ப்  போயிற்று. எப்போதாவது உணவு விடுதியில் சாப்பிட்டபோது கிடைத்த இன்பம் அடிக்கடி சாப்பிடுகையில் காணாமல் போயிற்று. இருப்பினும் என் அனுபவத்தில் ஒரு சில ஹோட்டல்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளின் சுவைகள் இன்னும் நாவிலும் நெஞ்சிலும் ஒட்டிக்கொண்டே உள்ளது.

தஞ்சையில் எனது முதல் ஹோட்டல் சாப்பாட்டு அனுபவம், ‘வாசவி’ யில் ஏ.சி. அறையில் பெற்ற ‘ஸ்பெஷல் சாப்பாடு’தான். இரண்டு ரூபாய்க்கு, பூரி மூன்று, வெரைட்டி ரைஸ் கொஞ்சம், அளவில்லா பச்சரிசி சாதம், சாம்பார், வற்றல் அல்லது மோர்க்குழம்பு, ரசம், கெட்டித்தயிர், மோர், இனிப்பு, வாழைப்பழம், பீடா என்று சாப்பிட்டபோது, ‘இப்படி ஒரு ஆடம்பர உணவா’ என்று மலைப்பு தோன்றியது. ஆனால் எங்கள் பட்ஜெட்டிற்கு கட்டுபடியாகாது என்பதால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அந்த சுவையான உணவை அணுகுவோம். தஞ்சையின் மற்றொரு பாரம்பரியப் புகழ் வாய்ந்த உணவகம் ‘ஹோட்டல் மங்களாம்பிகா’. அரசு கண் மருத்துவ மனை எதிரில் அமைந்த அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தால் ஏதோ காலச் சக்கரத்தில் பயணித்து 1948 க்கு சென்று விட்ட உணர்வை ஏற்படுத்தும். அக்காலத் திரைப்படக் கனவு காட்சிபோல் ஒரு மெல்லிய புகை மூட்டத்தில் அமர்ந்து, பின் நாலாபுறமும் பார்வையை மேய விட்டால் நமக்குத் தென்படுபவை: புராதன மர நாற்காலிகள், அறுங்கோண வடிவில் மேலே பீங்கான் பதித்த மேஜைகள், கல்லாப்பெட்டியில் நெற்றிக்கு இட்டுக்கொள்ள விபூதி, சந்தனம், சுவர்களில் தியாகராஜ பாகவதர், பி.யு சின்னப்பா, எம்.கே. ராதா, மற்றும் புஷ் ரவிக்கை அணிந்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, டீ.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலக்ஷ்மி, குமாரி கமலா போன்ற நட்சத்திரங்களின் பெரிய அளவு புகைப்படங்கள், மற்றும் லோட்டா அளவில் பெரிய டம்ளர்கள். எங்களைப் பார்த்தவுடனேயே முகம் மலரும் ‘ரங்கண்ணா’ என்ற சர்வரின் உபசரிப்பு ஒரு தனிச் சிறப்பு. பொதுவாகவே தஞ்சை மண்ணின் மைந்தர்களான எங்களைப்போன்றவர்கள் நல்ல filter காபி க்கு உயிரை விடுபவர்கள். அந்த ஹோட்டலின் விசேஷ அம்சம் ‘டிகிரி காஃபீ’. அந்த வடிகட்டி காபியின் மெல்லிய கசப்பு கலந்த, குடிக்கும்போதே தலைக்கேறும் புத்துணர்ச்சியும், குடித்தபின் வெகு நேரம் நாக்கில் நிற்கும் சுவையையும் இன்று நினைத்தாலும் அடடா என்று சிலிர்க்கிறது! மருத்துமனை போஸ்டிங் வரும்போதெல்லாம் நண்பர்கள் கூட்டத்துடன் எங்கள் மருத்துவ ஆசிரியர்கள் கூட்டமும் சேர்ந்து காலை பத்து மணிக்கு அங்கே சென்றால், எங்களுக்கென்று அமைக்கப்பட்ட ஒரு விசேஷ அறையில் காஃபீ உபசரிப்பு நடக்கும். நோய்களைப்பற்றி நாங்கள் விவாதித்ததை விட அந்த காபீயின் மகத்துவத்தைப் பற்றி விவாதித்ததே அதிகம் என்று சொல்லலாம்.

தஞ்சையில் சில இரவுக்கடைகள் புகழ் பெற்றவை. நாங்கள் இரவு டூட்டியில் இருக்கும்போது அந்தக் கடைகளுக்கு விஜயம் செய்யாமல் இருக்க மாட்டோம். அப்படி ஒரு கடைக்கு ஒரு வயதான அந்தண தம்பதியர்  முதலாளிகள். இரவு பத்து மணிக்கு தொடங்கி, விடிகாலை நான்கு வரை வியாபாரம் நடக்கும். இட்லி மட்டுமே கிடைக்கும். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி. என் நண்பன் ஒருவன் எப்போதும் சுமார் இருபது இட்லி சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டவன். அந்த மாமியின் இட்லி சுவை இன்றும் நினைவில். எங்கள் மருத்துக்கல்லூரி எதிரில் ‘ஸுலேகா’ என்ற கூரை வேய்ந்த ஹோட்டல் ஒன்று துவங்கினர். அந்தக் கொட்டகையில் நுழைய ஆரம்பத்தில் எங்கள் மருத்துவ கெளரவம் இடம் தரவில்லை. ஆனால் ஓருநாள் எங்கள் நண்பன் ஒருவன் அங்கு ‘பராட்டா’ (எங்கள் ஊரில் அதை புரோட்டா என்றும் poori யை boori என்றும் அழைக்கும் வழக்கம் ) பிரமாதம் என்று சொல்லியபின், எங்கள் கௌரவத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அங்கு சென்றோம். உண்மையிலேயே பரோட்டா குருமா அங்கு நன்றாகவே இருந்தது. பின் அடிக்கடி அங்கு செல்வதை வாடிக்கை ஆக்கிக் கொண்டோம்.

எங்களின் வருடாந்திர விடுமுறைக் காலமான டிசம்பர் மாதம் தவறாமல் சென்னை விஜயம் செய்வோம். அப்போது சென்னையில் நாங்கள் புதிய உணவகங்களைத் தேடி சென்று சாப்பிடுவதை வழக்கமாக்கினோம். அண்ணா சாலையில் புஹாரி பக்கத்தில் தொடங்கிய ‘சுவப்னா’ ஹோட்டலில் ஸ்பெஷல் சாப்பாடு நான்கு ரூபாய். எங்கள் நண்பர்கள் குழு பல நல்ல உணவுப் பிரியர்களை உள்ளடக்கியது. சாப்பிடத் தொடங்குகையில் முதலில் ‘வரவேற்பு பானம்’ என்று அருமையான எலுமிச்சை சாறு வந்தது. பின் பூரி மசால். எண்ணிக்கை இல்லாமல் சாப்பிடலாம் என்றதும், என் நண்பன் ஒருவன் சுமார் இருபது விழுங்கினான் என்று ஞாபகம். பின்னர் சாப்பாடு வந்தது. சிறிய கிண்ணத்தில் சாம்பார் வைத்ததை ஆட்சேபித்த எனது மற்றொரு நண்பன் சர்வரிடம் ‘தம்பி, நாங்கள் எல்லாம் தஞ்சாவூர்க்காரங்க; சாம்பாரை இப்படியெல்லாம் கிண்ணியில் வைத்தால் எங்களுக்கு கட்டுப்படி ஆகாது. நிறைய தேவை’ என்றதும் சாம்பார் வாளி எங்கள் மேஜை மேலேயே வைக்கப்பட்டது. அந்த ஹோட்டல் சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது. ஏனோ சில ஆண்டுகளிலேயே அது மூடப்பட்டது. (‘உன்னை மாதிரி நிறைய பேர் 30-40 பூரி சாப்பிட்டே ஹோட்டலைக் காலி பண்ணிட்டாங்கடா’ என்று எங்களின் பூரி நண்பனை கேலி செய்வோம்).

நாங்கள் நான்கு பேர் கொண்ட நண்பர் குழு, அடிக்கடி டூர் செல்வதை பழக்கமாக வைத்திருந்தோம். ஒரு முறை இரவில் மதுரை செல்கையில், வழியில் துவரங்குறிச்சி என்ற ஊரில் பேருந்து நிறுத்தப்பட்டது. அசைவப் பிரியனான எனது மற்றொரு நண்பன் பாய்ந்து சென்று ஒரு வழியோரக் கடையில் இடம் பிடித்தான். ‘இங்கு கிடைப்பதுபோல் ருசியான பரோட்டா ஈரேழு உலகிலும் கிடைக்காது’ என்று சர்டிபிகேட் கொடுத்த அவன் உள்ளங்கை அளவே இருந்த பரோட்டாக்களை ஒரு பிடிபிடித்தான். உண்மையிலேயே அங்கு அந்த சிறிய சைஸ் பரோட்டா குருமா ரொம்ப அருமையாகவே இருந்தது. பின் எப்போது அந்த வழியாகச் சென்றாலும் அங்கு பரோட்டா சாப்பிடாமல் நங்கள் போனதேயில்லை. சொல்லப்போனால் மருத்துவக்கல்வி படித்து, சுத்த உணவு, சுகாதாரம் என்று வாய் கிழிய நாங்கள் பேசினாலும், படிக்கும் காலத்தில் நாங்கள் சாப்பிடாத வழித்தட, மற்றும் பிளாட்பார உணவுக் கடைகளே இல்லை என்று சொல்லலாம். சுகாதாரத்தைவிட உணவின் சுவையே பெரிது என்று சொல்லி எங்களை வழி நடத்திய, எங்களின் நாக்குகளுக்கு, நாங்கள் அடிமையானோம் என்பதே உண்மை. ‘கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு’ என்று என் அம்மா சொல்லும் சொல்லை வேத வாக்காக நம்பினோம். அதனாலேயோ என்னமோ எங்களின் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படவேயில்லை.

பெரிய மருத்துவரானபின் சென்னையில் சாலைகளில் செல்லும்போது வழியோரம் உள்ள ‘கையேந்தி பவன்களில்’ நிற்கும் மக்கள் கூட்டத்தைக்கண்டு, அந்த நாளில் இப்படியெல்லாம் நாமும் சாப்பிட்டோம் என்று நினைத்தால் வேடிக்கையாக இருந்தது. இப்போது அப்படிச் சென்று சாப்பிட கெளரவம் இடம் கொடுக்குமா அல்லது வயிறு இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. நான் சுவையான ஹோட்டல்கள் என்று பட்டியலிட்டு சாப்பிட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் ஒரு நெடிய கட்டுரை எழுத நேரிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். அக்கரை இக்கரை இரண்டுமே பச்சை, என்று நினைக்கும் என்னைப்போன்ற பலர், அவரவர் ஊர்களில் பிரசித்தி பெற்ற சிறிய பெரிய  ஹோட்டல்களில், எங்களைப்போல் ரசித்து உணவருந்தி மகிழ்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ‘எது சுவையானது- வீட்டு சாப்பாடா அல்லது ஹோட்டல் சாப்பாடா’ என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை. இரண்டுக்கும் தனித்தனி மகத்துவம் உண்டு என்பது என் எண்ணம். எங்கள் காலத்தில் நல்ல ஹோட்டல்கள் குறைவு என்பதால் சுவையான பண்டங்களைத் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ மூலைக்கு மூலை சரவண பவன், வசந்த பவன், சங்கீதா, அஞ்சப்பர், தலப்பாக்கட்டி, புஹாரி, என்று சங்கிலித் தொடர் உணவகங்கள் நிறைந்து கிடைப்பதால், மக்கள் இவற்றை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விட்டனர் என்று எண்ணுகிறேன். தற்போது நகர ஹோட்டல்களில், எல்லா நாட்களிலும் நிரம்பி வழியும் குடும்பங்களின் கூட்ட நெரிசலைக்  கண்டால், வீட்டு சாப்பாடு என்ற ஒன்றே இருக்கிறதா என்ற கவலை வளருகிறது. ‘அம்மாவின் கைமணம்’ என்ற ஒன்றை வருங்கால சந்ததியினர் மறக்கப் போவது திண்ணம். தம்பதியர் இருவரும் வேலைக்கு ஓடிட வேண்டிய சூழலில் சமையற்காரியின் தயவால் உணவு கிடைக்கப்பெறும் பாக்கியம் பெற்றவர்களுக்கு வீட்டுக்கும் ஹோட்டலுக்கும் பெரிய வித்யாசமிருக்காது. வாழ்த்துக்கள்!

 

 

 

Advertisements

2 thoughts on “மனதில் நின்ற சில நினைவுகள் 6

  1. ஆடுதுறையில் பத்மவிலாஸ் ஹோட்டல் இன்னும் உள்ளதா?
    ஜெயசுந்தரம், சேதுபதி இவர்கள் இப்பொழுது எங்கு உள்ளார்கள்?

    Like

  2. பத்ம விலாஸ் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முதலாளியின் மகன், என் வகுப்புத் தோழன் தற்போது உயிருடன் இல்லை என்ற செய்தி அறிந்தேன். சேதுபதி கோவையிலும், ஜெயசுந்தரம் நீண்ட நாட்களாக UAE யிலும் இருக்கிறார்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s