வெற்றிக் கூட்டணி

தமிழ்த் திரையுலகம், தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது ஒரு காலம். இப்போது அதன் நிலையே வேறு. தமிழ்த் திரையுலகில் என்னை ஆட்கொண்ட முதல் பத்து நபர்களில் முக்கியமானவர்கள் மூவர் – சிவாஜி கணேசன், டி.எம். சௌந்தர்ராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்களை சரித்திர நாயகர்கள் என்று நான் கொண்டாடினால் அது மிகையில்லை என்று என் தலைமுறையினர் ஒத்துக் கொள்வார்கள். இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், மூவரையும் தேசிய விருது கொடுத்து மத்திய அரசு கௌரவிக்கவேயில்லை. மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் அமர்த்தி கௌரவிக்கப்படும் இவர்களுக்கு அந்த விருதுகளால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அரசு அவர்களைக் கண்டு கொள்ளவில்லையோ என்னவோ! 1955 முதல் 1980 வரை, ஒரு கால் நூற்றாண்டு கோலோச்சிய இவர்கள் தமிழ் உலகுக்கு அளித்த கலைத் தொண்டு வரையற்றது.

அதிகம் கல்வி பயிலாத சிவாஜி கணேசன் எப்படி ஒரு அற்புத மேதாவியாய் திரையில் பற்பல பாத்திரங்களாய் மாறி, ஒளிர்ந்து, மின்ன முடிந்தது என்று நினைத்தால் மலைப்பாக உள்ளது. அவர் ஒரு ‘மிகைநடிப்பாளர்’  என்று சிலர் குற்றம் கூறுவார்கள். எந்த காலகட்டத்தில் என்ன மாதிரி நடிப்பு தேவையோ, அதை அவர் சரியாகக் கொடுத்தார் என்பதே என் கருத்து. அதீதமான ஒப்பனையுடன் கலைஞர்கள் பங்கு கொண்ட தெருக்கூத்தில் தொடங்கி,  நாடகங்கள் மூலம் பின்பு பயணித்து, இறுதியில் திரையுலகில் காலூன்றிய கலை உலகம், அக்கலையை மக்களின் மன நிலைக்கும் அறிவு நிலைக்கும் ஏற்ப அந்தந்த கால கட்டத்தில் கொடுத்தது. சிவாஜி போன்றோரின் நடிப்பும் அப்படி ஒரு பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட ஒன்று. ஒரே கையால் ஒன்பது பேரை புவி ஈர்ப்பு விசையை மீறி வானில் தூக்கி அடிக்கும் இன்றைய ஒல்லிக் குச்சி தமிழ் நாயகர்களின் நடிப்புதான் ‘மிகைநடிப்பின்’  உச்சமே அல்லாமல் சிவாஜியின் நடிப்பு அல்ல. அவர் உருவகப் படுத்தாத கதாபாத்திரங்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எந்த வேடத்துக்கும் ஏற்பதாக அமைந்த அவர் முகம் அவருக்கு கடவுள் தந்த வரப்பிரசாதம். ‘கதாபாத்திரமாக வாழ்வது’ என்பது அவரால் மட்டுமே முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. புராண – சரித்திர புருஷர்கள் தொடங்கி, ஏழை – செல்வந்தன், தொழிலாளி – முதலாளி, படித்தவன் – படிக்காதவன், இளைஞன் – கிழவன், நாயகன் – எதிர்நாயகன் என்று எத்தனை விதமான தோற்றங்கள்! திரைப்பாத்திரங்களில், அவர் தொட்ட வரம்புகளை வேறு எவரேனும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அவரின் குரல் மற்றொரு வரப்பிரசாதம். குரலால் கூட நடிக்க முடியும் என்பதை அவரை விட வேறு யாரும் நிரூபித்ததில்லை. எந்த உடைக்கும் பொருத்தமான உடல், எந்த உணர்ச்சிக்கும் பொருந்தும் குரல், எந்த பாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தும் முகம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு அபூர்வ நாயகன் நம் தமிழ்த் திரை  உலகுக்குக் கிடைத்தது நமது பாக்கியம். ஒரே மாதிரியான சொறி தாடியுடனும், பரட்டைத்தலையுடனும் கையில் மதுவுடனும் எல்லாப் படங்களிலும் தோன்றும் இன்றைய தமிழ் நாயகர்களைப் பார்க்கும் தண்டனை பெற்ற என்னைப் போன்ற பெரிசுகளுக்கு பழைய சிவாஜி படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ஆறுதல் அடைவது ஒன்றுதான் வழி.

தமிழ்ப்பட இசையுலகில் ஒரு எளிய, புதிய பாணியை உருவாக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதை கோலோச்ச வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களையே சேரும். பின்னாளில் அவர்கள் பிரிந்த பின்னர், எம்.எஸ்.வி அந்த இசையை சிதற விடாது மெருகேற்றியது ஒரு வரலாறு. மெல்லிசையாய் இருப்பினும் கூட அதில் கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களையும் இணைத்து, படித்தவன் முதல் பாமரன் வரை ரசித்து, உணர்ந்து, காலத்துக்கும் அந்தப் பாடல்களை மனதுக்குள் செதுக்கி வைக்கச் செய்த மெல்லிசை மன்னரின் வித்தை, இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். எத்தனை இசைக் கருவிகளை உபயோகித்தாலும் கவிஞரின் பாடல் வரிகளை அழுத்தாமல், சிதைக்காமல் அவற்றிற்கு உயிரூட்டிய சிறப்பு அவரையே சாரும். அவற்குப்பின் வந்த இசை ஞானிகளும் புயல்களும் தங்கள் இசைதான் பாடல் வரிகளைவிட முக்கியம் என்ற கருத்தில், கவிதைகளை நெரித்து சிதைத்ததால் அவர்களையெல்லாம் என் மனம் இன்றும், இசை மேதைகளாய் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இசையில் எத்தனையோ சாதனைகள் செய்தபோதும் தன்னடக்கத்துடன் அதையெல்லாம் விளம்பரம் செய்யாமல் தொடர்ந்து தனது பணியை செய்தவர் எம்.எஸ்.வி. அவர் கொடுத்த தாலாட்டுப் பாடல்களின் வரம்புகளும் பரிமாணங்களும் எத்தனை விதம்! காதல் – நட்பு, சிரிப்பு – அழுகை, உறவு – பிரிவு, இன்பம் – துன்பம், ஞானம் – தத்துவம், பக்தி – நாத்திகம் இதுபோன்று எந்த உணர்ச்சிகளை எடுத்தாலும் அவை அனைத்தையும் தன் இசையால் ஆக்ரமித்தவர் அவர். அவரது இசை பரிமளிக்க மற்றொரு முக்கிய காரணகர்த்தா கவிஞர் கண்ணதாசன்; அவரது  உயிரோட்டமான கவிதை வரிகளை இவரது இசை மெருகேற்றியதா, அல்லது இவரது இசையை அவர் கவிதைகள் தூக்கி நிறுத்தியதா என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் இரண்டும் கச்சிதமாக இணைந்து காலத்தை வென்று நிற்கிறது என்பது மட்டுமே சத்தியம்.

‘ஆஹா! குரல் என்றல் இதுவல்லவோ ஒரு ஆண்மைக்குரல்’ என்று எல்லோரையும் கவர்ந்த ஒரு குரல், திரு. டி. எம். சௌந்தர்ராஜன் அவர்களது என்றால் நாம் மறுக்க முடியாது. தமிழ் தனது தாய் மொழியில்லை என்றபோதும் அதை அற்புதமாகப் பயின்று பாண்டித்யம் பெற்றவர் அவர். சுமார் முப்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர், பின்னணி பாடாத நடிகர்களே தமிழில் இல்லை எனலாம். குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு அவரது குரல் எப்படி கன கச்சிதமாகப் பொருந்தியது என்பது இன்றும் வியப்புக்குரியது. இவரது குரலும் சிவாஜியைப் போல் அற்புதமாக நடிக்கக் கூடியது. இவரது சிறப்பே இவரது குரல் தொனியாகும். எந்த சூழ்நிலைக்கும் ஏற்ற பாவங்களை இவர் குரலில் காணலாம். வேறு எந்த பின்னணிப் பாடகருக்கும் கிடைக்கப் பெறாத ஒரு பாக்கியம் அது. அதுவே அவர் பாடல்களுடன் நம்மை ஒன்றை வைக்கும். உச்ச ஸ்தாயியில் வெகு அலட்சியமாக அவரால் குரல் சிதைவின்றி உச்சரித்துப் பாட முடியும்; அதே வேளை மிக மெல்லிய அமைதியான குரலிலும் பாட முடியும். சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற கம்பீரமான நடிகர்கள் இருந்த காலத்தில் இவர் குரல் வளத்துக்கு ஒரு நல்ல களம் இருந்தது. பக்திப் பாடல்கள் உலகையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவரது முருகன் பாடல்கள் காலம் கடந்து நிற்பவை. எப்படிப்பட்ட நல்ல குரல்களாலும், நல்ல கவிஞர்களாலும் ,இசைஅமைப்பாலும், நாம் பல அற்புதப் பாடல்களை அந்நாளில் கேட்டு ரசிக்க முடிந்தது! சிவாஜி, கண்ணதாசன், விஸ்வநாதன், சௌந்தர்ராஜன் வெற்றிக் கூட்டணி அமைந்த 1950-80 தமிழ்த் திரையுலகின் ஒரு பொற்காலம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது போன்ற ஒன்று மீண்டும் அமைய வாய்ப்பே இல்லை.

இன்றைய தமிழ்த்திரை உலகம் இந்த ஆசான்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கலைவிழா நடத்தலாம். அவர்களது படைப்புகளை எல்லாம் சேகரித்து ஒரு திரை அருங்காட்சியகம் அமைக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். மலேஷியா மற்றும் இலங்கை தமிழர்கள் கூட இவர்களது சிறப்பை உணர்ந்து போற்றும் காலத்தில் நம் திரையுலகம் இவர்களை அலட்சியமாக மறக்கும் சரித்திர அவலத்தை நாம் என்னவென்று சொல்வது. எல்லா நாடுகளிலும், ஏன், நம் வடநாட்டிலும் கூட அந்நாள் திரையுலக ஜாம்பவான்களையும் மேதைகளையும் போற்றிப் பாதுகாக்கும் போது நம் தமிழர்களை நினைத்தால் மனம் வெட்கப்படுகிறது. எவன் வேண்டுமானாலும் நடிக்கலாம், பாடலாம், இசைஅமைக்கலாம் என்று ஆகிவிட்ட இந்நாளில் இத்தகைய மேதாவிகளிடம் நாம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது நமது மடத்தனம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

 

 

 

Advertisements

2 thoughts on “வெற்றிக் கூட்டணி

  1. மறக்க, மறுக்க முடியாத உண்மை. TMS, சிவாஜி யின் பாடல்களை பயணத்தின் போது கேட்டால் பயண அலுப்பு இருக்காது. மேலும் பழைய நினைவுகள் நெஞ்சில் அலை மோதும். பதிவிற்க்கு நன்றி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s