ஒருவர் மனதை ஒருவர் அறிய…..

ஒருவர் மனதை ஒருவர் அறிய

உதவும் சேவை இது

வாழ்வை, இணைக்கும் பாலமிது

இந்தப் பாடல் 60 களில் வந்த ஒரு ஜெய்சங்கர் படத்தில், அவர் தபால்காரராக பாடிக்கொண்டு செல்வதாக அமையப்பெற்றது. யோசித்துப் பார்த்தால் முன்பெல்லாம் (1970 க்கு முன் வந்த) திரைப்படங்களில் இது போன்ற சேவைகளைப் பற்றி புகழ்ந்து பாடும் பாடல்கள் வரும். அப்படி தபாலின் மகத்துவத்தை விளக்குவதாக இந்தப்பாடல் அமைந்துள்ளது. வெகு நாள் கழித்து இந்தப்பாடலை நான் கேட்டபோது தபால் என்ற ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டது போல் ஒரு சோகம் என்னை ஆட்கொண்டது உண்மை. ஒரு காலத்தில் மக்களிடையே, ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனமாக இருந்த கடித முறையும் தபால் சேவையும் இன்று உருவிழந்து, பொலிவிழந்து ரயில், பஸ் டிக்கெட் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘பழையன கழிதல் என்பது நியதி என்றாலும், நமது நெருங்கிய வயதான உறவினர் இறந்தபின் வரும் ஒரு வெற்றிடம் போல் ஒரு சோகத்தை இது ஏற்படுத்துகிறது. 1966 இல் எனது பள்ளியில், எங்களை ஒரு பெரிய தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அதன் சேவைகளை விளக்கியபோது அந்த வயதில் மிக மலைப்பாக இருந்தது.  (இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான அது ஆற்றிய சேவைகளை நினைத்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது). அவர்கள் வெகு லாவகமாகவும், வேகமாகவும் தபால்களின் மீது முத்திரை குத்தும் அழகு இன்றும் என் கண்களில் நிற்கிறது. மணி ஆர்டர், தந்தி என்று பற்பல வகையான கடித வகைகளை பரந்த இந்திய கண்டம் முழுவதும் சென்றடையும்படி அவர்களின் உழைப்பு செய்தது. உலகின் மிகச் சிறந்த நாடுகளின் சேவையைவிட, நம் நாட்டு தபால் சேவை சிறப்பானது என்பது சத்தியம். எந்தக் காடு மலை மேடானாலும் தவறாது கடிதங்கள் சென்று அடையும் என்ற உத்தரவாதம் நமக்கு இருந்தது. ஒரு மிதிவண்டியைத் தவிர வேறு வாகனங்களில் தபால்காரர்கள் சென்று நான் கண்டதில்லை. மழை வெயில் காற்று என்று பாராமல் நம்மை வந்து அடையும் கடிதங்களைப் பார்க்கும்போது அதை நம்மிடம் சேர்க்கும் அந்த நபரை எப்படி மறக்க முடியும்? தபால்காரரைப் போல் ஒரு நல்ல குடும்ப நண்பர் கிடைப்பாரா என்று கிராம மக்களைக் கேட்டுப் பாருங்கள். பல படிப்பறிவில்லாத மக்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காட்டி, அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியால் தான் வந்த மோசமான சாலையின் துன்பத்தையும் மறக்கும் அந்த தபால்காரர்கள், அவர்கள் குடும்பத்தில் ஒருவரானவர். மக்கள் அன்புடன் தரும் மோரின் குளிர்ச்சியால் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும் மறக்கும் அவர்கள் செய்தது ஒரு ஒப்பற்ற சேவையே ஆகும். தபால் தலைகள் சேகரிப்பு என்னும் ஒரு பொழுபோக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது என்பது இன்றும் உண்மை. அதில் ஈடுபடாத சிறுவர் சிறுமியர் அக்காலத்தில் மிகவும் குறைவு. ஒரு காலத்தில் வீதிக்கு வீதி வைக்கப்பட்ட அந்த சிவப்பு தபால் பெட்டி ஒரு கம்பீர தலைவனைப் போல் காட்சியளிக்கும். இப்போது அவைகள் எல்லாம் மறைந்து போயின. லண்டனில் இன்றும் சிவப்பு தபால் பெட்டிகள் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் நம்மூரில்?  இ மெயில் ஆக்ரமிப்பு வந்தபின்னர் நமது பழைய தபால் ‘நத்தை மெயில் என்று அழைக்கப்படுவது சோகம். நத்தை போல் மெதுவாக வந்தாலும், அந்த தபால் ஏந்தி வந்த சொந்தங்களின் கையெழுத்து பிரதிகள் நமக்கு அளித்த மகிழ்ச்சியை மின்னணு அஞ்சல் சத்தியமாகத் தர முடியாது. தாய், தந்தை, மனைவி, மகன், மகள் என்று விதவிதமான கையெழுக்களை தபால் மூலம் பார்க்கும்போது அவர்களையே நேரில் பார்ப்பது போன்ற அந்த உணர்வை இப்போது பெற முடியுமா?  சேகரித்து வைக்கப்பட்ட பழைய கடிதங்கள் ஒரு தலைமுறையின் வரலாற்றையே சொல்லக்கூடிய வல்லமை பெற்றது.  பொங்கல், புத்தாண்டு மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள் தேர்வு செய்து, வாங்கி உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நமது கையெழுத்திட்டு அனுப்பும்போது கிடைத்த மகிழ்வு, 123 க்ரீட்டிங்ஸ். காம் மூலம் இ மெயிலில் அனுப்பும்போது கிடைப்பதில்லை. அச்சடிக்கப்பட்ட வாழ்த்து மடல்கள் எல்லாம் வழக்கொழிந்து போனது வருத்தமே. வாழ்க்கையே ஒரு விரைவு ஓட்டத்தில் எல்லோருக்கும் ஓடும்போது, தபால் என்று பழங்கதை பேசுவது  பொருத்தம் இல்லை என்றாலும், அந்த இனிய அனுபவங்களை மீண்டும் பெற முடியாது என்ற ஏக்கம் மிஞ்சுவதை, தவறு என்று சொல்ல முடியுமா?

 

Advertisements

One thought on “ஒருவர் மனதை ஒருவர் அறிய…..

  1. மூத்த குடிமகன்களுக்கு இன்றும் அதிக வட்டி விகிதத்தில் சேமிப்பு திட்டங்கள் மூலம் சேவை செய்கின்றது. மேலும் ATM வசதிகளும் தரப்போவதாக தெரிகின்றது. வங்கிகளில உள்ள கட்டுப்பாடுகள் இதில் குறைவு . ஆகையால் நன்கு பயன் படுத்திக்கொள்வது நமக்கு நல்லது. பதிவிற்க்கு நன்றி.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s