பழையன என்றும் புதியன – 19

இரவின் மடியில்

https://youtu.be/UpzA1lcdnUY

இரவில் மனம் அமைதி பெறவும், நல்ல உறக்கம் வரவும் நல்ல இனிமையான பழைய திரைப்படப் பாடலைகளைக் கேட்டாலே  போதும். அப்படிப்பட்ட பாடல்களில் சிலவற்றை இந்தப் பதிவில் சொல்லவிருக்கிறேன். முதலாவதாக, ‘தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் வரும் “பூ உறங்குது” என்ற கவியரசின் இனிய பாடல். அவர் தமிழ் இலக்கியங்கள் நன்கு பயின்றவர் என்பதால் பல இலக்கியப் பாடல்  வரிகளை, எளிய தமிழில் திரைக் கவிதையாக்கித் தந்தவர். தலைவனைப் பிரிந்த தலைவி படும் துயர் பற்றிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு காட்சி இந்த திரைப்படத்தில் வரும்பொழுது நாயகி பாடுவதாக வந்த காட்சி. மஹாதேவன் அவர்கள் தந்த இசைப் பின்னணியும் மெட்டும் ஒரு அற்புதக் கலவை

“தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி.

அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி

திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி

தெரிந்திருந்தும் கொல்ல வந்தால் என்னடி நீதி”

பி.சுசீலாவின் மாயக்குரலில் இரவில் கேட்க ஏற்ற பாடல் இது. இதை ரசிக்க முடியவில்லையென்றால் உங்களைக் கடவுள் காப்பாற்றட்டும்!

 

https://youtu.be/tdxrpD7QQpM

மீண்டும் ஒரு MGR – தேவர் இணைந்த படம் – குடும்பத்தலைவன் (1962). தேவருக்கு ஒரு பிடிவாத குணம் உண்டு. அவருக்கு கண்ணதாசன்தான் பாடல்கள் எழுத வேண்டும்; KVM தான் இசையமைக்க வேண்டும். TMS , சுசீலா மட்டுமே பாட வேண்டும். இப்படி வந்த பாடல்கள் அனைத்துமே அவர் படங்களின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணம். மகாதேவனின் இசையில் கண்ணதாசனின் மற்றொரு அமுத கானம். வழக்கம்போல் சுசீலாவின் தேன் குரலுக்கு அற்புத அபிநயம் காட்டும் சரோஜாதேவி. மழையில் நனைந்தபடி அவர் பாடிய இப்பாடல் ‘இரவின் மடியில்’ மயங்குவதற்கு ஏற்றதொரு பாடல்.

 

https://youtu.be/Vil3GTzqw14

https://youtu.be/osw_gh1XXd8

என்னைக் கவர்ந்த அந்தக்கால இயக்குனர்களில் ஸ்ரீதர் மிக முக்கியமானவர். எத்தனை விதமான  வெற்றிப் படங்களைத் தந்தவர்! அவரது படங்களில் பாடல்கள் எல்லாம் மிகவும் நன்றாக அமைந்துவிடும். மெல்லிசை மன்னர்- கண்ணதாசன் கூட்டணி பெரும்பாலான அவர் படங்களில் பங்கு பெற்றனர். எழுபதில் வந்த அவரது படமான ‘அவளுக்கென்று ஓர் மனம்’ படத்தின் அத்தனைப் பாடல்களும் ஹிட் என்றாலும், இரவில் கேட்க இந்த இரண்டு பாடல்களும் ஏற்றவை. ‘மலர் எது என் கண்கள்தான்’ என்று சுசீலா பாடிய பாடலும், ஜானகியின் மயக்கும் குரலில் வந்த ‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்’ என்ற கானமும் என் மனதில் ஆழமாகப் பதிந்தவை. அக்கால இளைஞர்களை கட்டிப்போட்ட இந்த இரு பாடல்களையும் கேளுங்கள். என் வார்த்தையின் உண்மையை உணர்வீர்கள்!

 

https://youtu.be/CLDrhWpj8bw

இன்னுமொரு ஸ்ரீதர் படப்பாடல். ‘உத்தரவின்றி உள்ளே வா’ என்ற எழுபதில் வந்த அவரது நகைச்சுவைப் படத்தில் அமைந்த ‘காதல் காதல் என்று பேச’ என்று துவங்கும், ‘தர்மாவதி’ ராகத்தில் அமைக்கப்பட்ட சுசீலாவின் இனிமைப் பாடல். பாடகர் ஸ்ரீகாந்தின் மெல்லிய ஹம்மிங் இப்பாடலுக்கு மேலும் மெருகூட்டும். ‘காதலுணர்வு’ என்பதை நாகரீகமாகக் காட்டும் இப்பாடலை ரசிக்காத இளம் உள்ளங்களே அந்நாளில் இல்லை என்று அடித்து சத்யம் செய்வேன்! இசையிலும் இனிமைக்குரலிலும் இரவில் கரைய பொருத்தமான பாடலிது.

 

https://youtu.be/g05i9wsQ6tk

சாவித்திரி ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் என்று அக்கால மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். தனது முக அழகாலும் காட்டும் பாவனைகளிலுமே அவர் எல்லோர் மனதையும் கொள்ளையடித்து விடுவார். பாடல் காட்சிகளில் அவரது உதட்டசைவும் நடிப்பும் மிகவும் பொருத்தமாக இருக்கும். மனதிற்கு அமைதி தரும் இந்த மெலடி ‘பாத காணிக்கை’ படத்தில் வருவது. அக்காலத்தில் முறை மாப்பிள்ளை என்ற உறவு மிகவும் பிரபலம். அத்தை மகனை மணமுடிப்பது பல குடும்பங்களின் வழக்கம். அப்படித்  தன் அத்தை மகனை நினைத்துப் பாடும் இப்பாடல் காதுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் விருந்து. இனி என்ன பாடுபட்டாலும் இது போன்ற பாடல்கள் கிடைக்காது.

 

https://youtu.be/HVY9Mub1XBs

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நாம் ஒரு காரணத்துக்காக மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம். சரித்திர, இலக்கிய, மற்றும் புராண இதிகாசப் பாத்திரங்களை நமக்குத் திரையில் காட்டிப் புரியவைத்த ஒரு மேதை அவர். இல்லையெனில் ‘கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன்,சிவன்’ போன்ற பாத்திரங்கள் அடங்கிய காவியப் படங்கள் நமக்கு கிடைத்திருக்காது. அவர் கவி காளிதாசனாக நடித்த படம் அறுபதுகளில் வந்த மகா கவி காளிதாஸ்’. அப்படத்தில் KVM இன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் எல்லாப் பாடல்களும் இனிமையானவை. குறிப்பாக ‘மலரும் வான் நிலவும்’ என்ற இப்பாடல் இரவில் கேட்க ஏதுவானது. தலைவனைப்பிரிந்த தலைவியின் இன்னொரு கீதம்.

“மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ

தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க, என் தலைவா உனக்கிது வேடிக்கையோ’

மெல்லிய உணர்வுகளைக் கண்ணதாசனைத் தவிர வேறு யாரேனும் இப்படி எளிதாக எடுத்துரைக்க முடியுமா? மனதை சாந்தப்படுத்தும் இப்பாடல் தூக்க மருந்து.

 

https://youtu.be/R3oJDQjaMIs

சூலமங்கலம் ஒரு இனிமையான பாடகி என்று அறிவோம். அவரது மற்றொரு முத்தான பாடல் ‘பாவை விளக்கு’ படத்தில் இடம் பெற்ற ”நீ சிரித்தால் நான் சிரிப்பேன்’ என்ற இந்த அமுத கானம். மகாதேவனின் சிறப்புத்  தாளத்தில் அமையப்பெற்ற இன்னுமொரு அற்புதம். மருதகாசியின் எளிமையான கவிதை மற்றுமோர் அழகு. பெரும்பாலும் வில்லியாக வரக்கூடிய எம்.என்.ராஜம் இப்படத்தில் ஒரு நல்ல வேடம் கொண்டார். இப்பாடலில் அவரது நடிப்பு எளிமையான இனிமை. என்று கேட்டாலும் மனம் விரும்பும் பாடலிது எனக்கு. உங்களுக்கு?

 

https://youtu.be/cfUedZ9DCjs

இந்தப் பாடல் 71 ஆம் ஆண்டு வெளியான ‘ஞான ஒளி’ படத்தில் இடம்பெற்ற, ஆனால் அடிக்கடி ஒளிபரப்பப்படாத பாடல். பெயருக்கேற்ப மெல்லிசை வழங்கியவர் விஸ்வநாதன். மிகச்சில இசைக் கருவிகளை உபயோகித்து எப்படி அவரால் இப்படியோர் இசை சரத்தை வழங்க முடிந்தது? நாயகி கிருத்துவப் பெண் என்பதால் இசையில் மாதா கோவில் மணியோசையைக் கலந்து கொடுத்தது சிறப்பு. பாடல் ஆசிரியர் கவியரசர். “மணமேடை, மலர்களுடன் தீபம்” என்று துவங்கும் இந்த இனிமையான சுசீலாவின் பாடலில்  ஊர்வசி சாரதாவின் அழகு முக பாவங்கள் காதல் உணர்வை மென்மையாக எடுத்துரைக்கும். கருப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்பாடல் இன்றுவரை பார்க்கவும்  இரவில் கேட்கவும் மதுர அனுபவம்.

 

https://youtu.be/oycLE5Rbo08

வெள்ளிவிழா கண்ட ‘திருவிளையாடல்’ படத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. KVM இசையில் அத்தனை பாடல்களும் காலத்தால் அழியாதவை. அவற்றில் ஒன்றான “நீல சேலை கட்டிக்கொண்ட” என்ற இந்த மெலடி கானக்குயில் சுசீலாவின் மற்றொரு ஹிட். கல்யாணத்துக்கு காத்திருக்கும் மீனவப்பெண், சமுத்திரத்தைப் பெண்ணாக உருவகப்படுத்தி, பாடம் கேட்பதாக புனையப்பட்ட பாடலுக்கு உயிர் தந்தவர் கண்ணதாசன். சாவித்திரியின் நல்ல  நடிப்போடு சேர்ந்து பளிச்சென்ற  ஒளிப்பதிவும் இக்காட்சிக்கு மெருகூட்டும். “இரவின் மடியில்’ மற்றொரு முத்து.

 

https://youtu.be/YA50A8TqeRM

படம் வெளியான நாள் தொடங்கி இன்றுவரை, மூன்று தலைமுறைகளைத் தாண்டி, இந்தப்பாடல் நிற்கிறது; இன்றும் யுவதிகளால் பாடப்படுகிறது. ஆம், ‘புதிய பறவை’படத்தில் வரும் ‘உன்னை ஒன்று கேட்பேன்’ என்ற  கானம்தான் அது. பாடல் வரிகளை சற்றும் தொந்தரவு செய்யாத, காதுகளைத் தாக்கி உறுத்தாத மெல்லிசை அமைத்தவர்கள் அதில்  மன்னர்கள். படத்தில் நாயகன் மட்டுமல்ல; நாமும் இரவில் இப்பாடலைக் கேட்டால் குழந்தை போல் உறங்குவோம் என்பது உறுதி. முடியாதவர்கள் கவுன்சிலிங் செல்வது நல்லது!

 

 

https://youtu.be/Kaf7Pyh5Bwk

ஒரு ஐம்பது அறுபதுஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் பிறந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அப்படி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டு கட்டிப் போட்டது இப்பாடல். நாயகி, தானே தூக்கமாக இருந்திருந்தால் நாயகனை கைப்பற்றித் துணையாக இருப்பேன் என்று பாடுவதாக வைத்த கவியரசரையும், அதற்கு இப்படியொரு  மெல்லிசை அமைத்த மன்னர்களையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இரவு நேரத்தில் கேட்க தகுதியான  புல்லாங்குழல். அகார்டியன் போன்ற கருவிகளின் மென்மையான இசையை இப்பாடலில் பயன்படுத்திய மன்னர்கள் வாழ்க! இன்னும் பல ஆண்டுகள் கழித்தும் நிலைத்திருக்கக்கூடிய கானம்!

 

https://youtu.be/bCmYKKuPJsk

ஏ.எம் ராஜா என்ற மென்மையான வசீகரக்குரலோன் பாடகர் அக்காலத்தில் தமிழ்த் திரையில் பல நளினமான மெலடி பாடல்களை அளித்தவர். அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர்  என்பதும் ஒரு உண்மை. ஆனால் ஏனோ அவர் திடீரென இசை அமைப்பதை நிறுத்தியது அக்கால திரையுலக அரசியலாக இருக்கக்கூடும். ஸ்ரீதரின் பல இடங்களுக்கு அவர்தான் இசை. ஸ்ரீதரின் முதல் படமான ‘கல்யாணப்பரிசு’ படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கவிதை வரிகளில், ராஜா இசையமைப்பில் அவரது மனைவியான ஜிக்கி என்ற ஜி. கிருஷ்ணவேணி பாடிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற இந்தப் பாடல், உறங்காதவர்களையும் உறங்க வைக்கும் வல்லமை பெற்றது.

 

https://youtu.be/Fy3YV63R0L4

அறுபது இறுதியில் வந்த MGR இன் ‘கலங்கரை விளக்கம்’ வாலிக்கு புகழ் சேர்த்த ஒரு படம். ஆனால் ‘என்னை மறந்ததேன்’ என்ற இப்பாடலுக்கு சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள். சுசீலாவின் மயக்கும் குரலில் மிகவும் இனிமையான பாடல். இரவில் கேளுங்கள்!

 

https://youtu.be/csnPP_G2b78

‘படகோட்டி’ படத்தின் வெற்றிக்கு ஓர் முக்கிய காரணம் அதன் பாடல்களும்  ஆகும்.  வாலியும் மெல்லிசை மன்னரும் பின்னியெடுத்த அற்புத கானங்கள். அவற்றிற்கு உயிரூட்டிய TMS, சுசீலாவின் அற்புத குரல் ஜாலங்கள். ‘என்னையெடுத்து’ என்ற இந்தப்பாடலை கேளுங்கள். இசை மனதை வருடும். குரல் மனதை அமைதிப்படுத்தும். இசையின் மாயாஜாலம் ஏற்படுத்தும் சாந்தம்!

 

https://youtu.be/T-ZT_8dsYn4

‘உயிர் நீ உனக்கொரு உடல் நான்

உடல் தொட்டால் இன்பக் கடல் நான்

பெண்ணே நீ வாழ்க படம் ஜெய்சங்கர்  KR விஜயா நடித்தது. மிகவும் எளிமையான ஆனால் இனிமையான இசையில் இப்பாடல்  என் மனத்தைக் கவர்ந்த ஒன்று. ‘இரவின் மடியில்’ கேட்க எனது தேர்வு.

 

https://youtu.be/sFSJVnHY8lA

எழுபதில் வந்த ‘நிலவே நீ சாட்சி’ திரைப்படம், ஜெய்சங்கருக்கு வெற்றி பெற்ற ஒன்று. நல்ல திரைக்கதை அம்சமும் இனிமையான பாடல்களும் கொண்ட இப்படத்தில் வயலின் இசையைப் பின்னணியாகக் கொண்ட இப்பாடலை விஸ்வநாதனும் சுசீலாவும் சேர்ந்து இனிமையாக வழங்கியிருப்பார்கள். இப்பாடலில் சுசீலாவின் குரல் சற்று வித்யாசமாக இருக்கும். சுகமான பாடல். இரவுக்கும் நிலவுக்கும் ஏற்றது!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s