கடமையாற்றல் பெரும் தவம்

தேடிச் சோறு நிதந் தின்று – பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பலசெயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

வீழ்வே னென்று நினைத் தாயோ?

மிகவும் சுயகர்வம் உள்ள பாரதியார் போன்ற கவிஞராலேதான் இப்படிப் பாட்டெழுத முடியும். ஆனால் ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கையைச் சுட்டிக்காட்டி அவரை ‘வேடிக்கை மனிதன்’  என்று அவர் கூறியதில் எனக்கு உடன்பாடில்லை. பாரதி தன்னை சாதிக்கப் பிறந்தவராக எண்ணிக் கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் ஒரு சாமானியனின் வாழ்வை எள்ளி நகையாடுவது எனக்கு வேதனை தரும் விஷயம்.

உலகில் பிறந்த அனைவருமே சாதனை செய்யப் பிறந்தவர்கள், ஆனால் எல்லோரும் முயற்சி செய்வதில்லை என்ற ஒரு போலியான மாயை இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. எனது முப்பத்தைந்து ஆண்டு கால ஆசிரியர் வாழ்வில் எந்த ஒரு மாணவனையும் அவ்வாறு நான் உற்சாகப்படுத்தியதில்லை. மாறாக ‘உனது திறமைக்கேற்ப நீ முயற்சி செய்’ என்றுதான் அறிவுறுத்தியிருக்கிறேன். பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அகத்தூண்டுதல் குருமார்கள் என்று பலரும் சிறுவர்களுக்கு அறிவுறுத்தும்போது அப்துல் கலாம், சச்சின் டெண்டூல்கர், இளையராஜா என்ற சாதனையாளர்களையெல்லாம் மேற்கோள் காட்டி அவர்களைப் போல வரவேண்டும், புகழ்பெற வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இன்றைய பெற்றோர்களைப்பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. படிப்பு, விளையாட்டு எல்லாவற்றிலும் தங்கள் பிள்ளைகள்தான் முதலாக வரவேண்டும் என்று அவர்களை படுத்தும் பாடு நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உலகில் பிறந்த அனைவராலும் சாதிக்க முடியாது என்பது எதார்த்தம். அதனால் என்ன குறைந்துவிட்டது?

என் துறையையே எடுத்துக்கொண்டால் ஆயிரமாயிரம் மருத்துவர்கள் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு பிராக்டிஸ் செய்கிறார்கள். அவர்கள் பெயர் அந்த ஊரிலேயே பலருக்குத் தெரியாது. ஆனால் மிகப் பிரபலமான சிறப்பு மருத்துவர் சிலரின் பெயர் உலகுக்கே தெரியும். ஆனாலும்  அந்த சிலரைவிட இந்த சாதாரண மருத்துவர்கள் சாதிப்பது அதிகம் பல குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பேணுபவர்கள் இவர்களே. இவர்கள் சாதனையாளர்கள் இல்லையா?

ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்து, சுமாராகப் படித்து, சிறிய வேலையாயினும் ஒழுங்காக செய்து, சொற்ப வருமானமானாலும் அதற்குள் கண்ணியமாக, நேர்மையாக குடும்பத்துடன் வாழ்ந்து, பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தால் அத்தகைய ஒருவனது வாழ்க்கையே ஒரு சாதனைதான். கடமையாற்றல் என்பது ஒரு மாபெரும் தவம். அதை ஒருவன் ஒழுங்காக செய்தாலே அவனொரு மேதைதான். அவன் வாழ்வும் பூரணத்துவம் பெற்றதுதான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

நாரதரைப் பற்றிய ஒரு கதை உண்டு. சகலமும் கற்ற, திரிலோக ஞானியான அவருக்கு தன்னைப் போன்ற நாராயண பக்தன் எந்த லோகத்திலும் இல்லை என்பது கருத்து. அதை ஒருமுறை நாராயணனிடம் கூற, அவர்  ‘நீ பூலோகம் சென்று ஒரு விவசாயியை நாள் முழுதும்  இருந்து கவனித்துப் பார்’ என்றார். அவரும் அவ்வாறே சென்று அந்த மானிடனை பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த விவசாயி நாராயணனை ஒரு முறை வணங்கினார். பின்னர் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கினார். அவருக்கு ஏகப்பட்ட துன்ப காரியங்கள் முதல் நாள் நடந்திருந்தன. அவரது விளைந்த பயிர், மழையால் சேதமடைந்திருந்தது. மாடு ஒன்று இறந்து போனது. அவரது மகனைப் பாம்பு கடித்து சிகிச்சை செய்ய ஓடினார். இது போல நாள்முழுதும் அவருக்கு பல இன்னல்கள் வந்தன. இருப்பினும் எல்லாவற்றையும் நேர்கொண்டு காரியங்கள் ஆற்றி, இரவு உறங்கப் போகு முன் மீண்டும் ஒருமுறை அவர் நாராயணனுக்கு நன்றி சொல்லி வணங்கினார். நாரதர் வந்து நாராயணனிடம் தான் பார்த்ததைக் கூறினார்.

நாராயணன் அவரிடம் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய்  கொடுத்து ‘இதில் ஒரு துளிகூட சிந்தாமல் உலகை வலம் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். உடனே நாரதர் அவ்வாறே புறப்பட்டுத் தன் கவனம் முழுவதும் அந்தக் கிண்ணத்தின் மீதே இருக்கப் பயணம் தொடங்கினார். வழியில் சந்தித்த பிரம்மன், சிவன் எவரையும் அவர் சட்டை செய்யாமல் கிண்ணத்தையே பார்த்த வண்ணம் நடந்தார். தன்னை கூப்பிட்ட நாராயணன் குரலைக் கூட அவர் செவிமடுக்கவில்லை. ஒருவழியாக உலகை வலம் வந்தபின் எண்ணெய் சிந்தாமல் நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணன் அவரைப் பார்த்து “உனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு வேலையை நீ நாள் முழுதும் செய்தபோது, எதிரில் வந்த கடவுளரைக் கவனிக்கவில்லை; என் குரலைக்கூட கேட்கவில்லை; ஒருமுறை கூட என்னை நினைக்கவில்லை. ஆனால் அந்த மானிடன் அத்துணை வேலைகள் மற்றும் துயரங்கள் இருப்பினும் ஒரு நாளைக்கு இருமுறை என்னை வணங்கினான். அவன் உண்மையான பக்தனா அல்லது நீயா” என்று கேட்டார் நாரதருக்கு கர்வம் அழிந்தது. சாதாரண மனிதர்களும் பெருமைக்குரியவர்கள் என்பதை உணர்த்துவது இக்கதை.

யோசித்துப்பாருங்கள்! கலாம் போல சாதித்தவர்கள் உலகில் ஒரு ஆயிரம் பேர் இருக்கலாம் ஆனால் இவர்களது வாழ்நாள் உழைப்பு யாருக்காக? கோடானு கோடி சாமான்ய மனிதர்களும் வாழத்தானே? இந்த கோடிக்கணக்கான வேடிக்கை மனிதர்கள்தான் நாம் உயிர் வாழ விளைவிக்கிறார்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள், வண்டிகள் ஓட்டுகிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், கட்டடங்கள் காட்டுகிறார்கள், நம்மை ஆள்வதற்கு அரசையே தேர்ந்தெடுக்கிறார்கள். பலதரப்பட்ட மக்கள் இணைந்ததுதான் ஒரு சமுதாயம். அதில் சாதித்தவர், சாதிக்காதவர் ஒவ்வொருவரின் பங்கும் தேவை. சாலைகள் இல்லாத கிராமங்களில், மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களும் மானிடர்களே!

பல நேரங்களில் சாமானியர்களுக்கு இருக்கும் பொது அறிவு, படித்த பல அறிஞர்களிடம் இல்லாததைக் கண்டு வியந்திருக்கிறேன். அதே வேளை தானும் சாதனையாளன் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து பார்த்து, அலுத்துப்போய் வாழ்விழந்த மானிடர்கள் ஆயிரக்கணக்கில் திரிவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு பேருந்து நடத்துனர் ‘சூப்பர் ஸ்டார்’ ஆகி விட்டதால் தானும் அதுபோல் கனவுகண்டு, வாய்ப்பின்றி  சென்னையில் வறுமையுடன் திரியும் நபர்களைச் சந்தித்திருக்கிறேன். எனவே அற்ப வேலை என்பது எதுவுமில்லை. கிடைத்த வேலையை நல்லபடி செய்யும் எல்லோரும் சாதனையாளர்களே. நினைவில் கொள்ளுங்கள்! ஆயிரத்தில் ஒருவன் சாதனையாளன் ஆகவேண்டுமானால் மீதம் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது சாதாரண மானிடர்கள் தேவை!

இங்கு பிறந்த ஒவ்வொருவரும் தான் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவரது  குடும்பத்துக்கும், உலகுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுதாத சட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அது மூடத்தனம். நமது நல்லெண்ணத்தையும் திறமையும் நாம் நமக்கு நிரூபித்தால் அதுவே போதும். நமது மனசாட்சியின் நிம்மதிக்கும்  நிறைவுக்கும்  வாழ்ந்தாலே போதும். அதற்கு நமது கடமைகளை ஒரு தவம் போலச் செய்தாலே போதும்.  

காணாமல் போனவர்கள்! (பதிவு 7)

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பாத்திரங்கள் வாங்குவதில் உள்ள ஈடுபாடு, அவர்கள் புடவைகள் வாங்கும் முயற்சிக்கு சற்றும் குறையாதது என்பது எனது கருத்து. இது ராஜராஜ சோழன் காலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களைக் கேட்டால்  ஒருவேளை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை நான் பார்த்தது எனது அம்மா, மாமியார், மற்றும் என் மனைவி பாத்திரங்கள் வாங்கிய முறைதான்.

அந்நாளில் வேட்டிகள், சட்டைகள் மற்றும் பட்டுப் புடவைகள் (சரிகை இருந்தால் மவுசு அதிகம்) பலநாட்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் வீடுகளில் டிரங்குப் பெட்டிகளுக்குள் சிறைப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் அவற்றை அன்பளிப்பாய் வழங்கிட அதிகம் அநாதை ஆசிரமங்களும் கிடையாது. நம்முடைய பொருளாதாரமும் அவ்வளவு கொடைத் தன்மைக்கு இடம் தராது. அதனால் நம்முடைய இல்லங்களுக்கே வந்து அவற்றை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடாக புதிய எவர்சில்வர், அலுமினிய பாத்திரங்கள் தரும் வியாபாரிகள் தினந்தோறும் வீதி வீதியாக வருவார்கள். பழைய துணிகளை எடுத்துப்போய் என்ன செய்வார்கள் என்பதற்குப் பல விளக்கங்கள் உள்ளன. நாம் அதற்குள் சொல்ல வேண்டியது இல்லை. கற்காலப் பண்டமாற்று வியாபாரம் நிலைத்து நின்றது இவர்களால்தான் என்பது மட்டும் உறுதியான செய்தி.

இவர்களது வியாபார உத்திகளும் அதை சமாளித்து பேரம் பேசும் நம் வீட்டுப் பெண்டிர்களின் சாமர்த்தியமும் பற்றி முழு வியாசம் எழுதலாம். நம் வீட்டுப் பழைய துணிகளை அந்த வியாபாரி கஸ்டம் அதிகாரியைவிடத் தீவிரமாக சோதனை செய்து, அவற்றில் உள்ள கிழிசல்கள் எத்தனை என்று கணக்கெடுப்பார். அவை அதிக எண்ணிக்கையில் இருந்தால் மதிப்பு குறையும். சரிகை இல்லாத பட்டுப் புடவைகளை சட்டை செய்யவே மாட்டார். இருப்பினும் நமது அன்னையர் குலம் விடமாட்டார்கள். “கிழிசல் இல்லாவிட்டால் நான் ஏன் உன்னிடம் அவற்றைத் தருவேன்? நானே உபயோகிக்க மாட்டேனா?’ என்று அவர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருந்ததாகத்தான் தோன்றுகிறது. அக்காலத்தில் கிழிசல் இல்லாவிடில் வெளிறிய சட்டை புடவைகளைக்கூட அணியும் பழக்கம் எங்களுக்குண்டு.

பற்பல வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் பத்துப் பதினைந்து உருப்படிகளை எடுத்துக்கொண்டு ஒரு சிறிய எவர்சில்வர் சொம்பை அந்த வியாபாரி தருவார். பிறகு நடை பெறுவது எல்லாம் ஒரு ‘கண்துடைப்பு நாடகம்’ என்று நமக்குத் தோன்றும். அம்மா ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, தரச்சொல்லி வற்புறுத்த அவர் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று மறுக்க, இவ்வாறு பல சமரசத்துக்குப்பின் ஒரு நடுத்தர அளவுப் பாத்திரத்தை அவர் கொடுப்பார். இருவருமே வெற்றிப்புன்னகை பூப்பது நமக்கு புரியாது. பேரம் பேசுவது எப்படி என்று ‘வணிக மேலாண்மை’ கல்லூரிகளில் இத்தகைய அம்மாக்களின் புத்திசாலித்தனத்தை பாடமாக வைக்கலாம். ஒருமுறை அந்த வியாபாரி வந்தால் நிச்சயம் இரண்டு மூன்று பாத்திரங்கள் எல்லோர் வீடுகளிலும் வாங்கப்படும். திருமணமாகப் போகும் பெண்ணுக்கு வேண்டிய சீதனமாக அவை பெரிய பெட்டிக்குள் அடைக்கலம் புகும். பல வீடுகளில் மகள் திருமணத்தில் தந்தையரின் மானம் காக்கப்படுவது நம் தாய்க்குலத்தின் இத்தகைய செய்கைகளால்தான் என்றால் அது பொய்யில்லை.

இத்தகைய கலையில் எனது தாயைவிட மாமியார் விற்பன்னர். அவரது சாமர்த்தியத்தை சென்னையில் பார்த்து வியந்திருக்கிறேன். அதில் பாதியளவு என் மனைவிக்கு இருந்ததனால் மகிழ்ச்சி. பின்னாளில் எவர்சில்வர் பாத்திரங்களுடன் பிளாஸ்டிக் வாளிகள் பண்டமாற்றில் சேர்ந்து விட்டன. என் மனைவி பாத்திரங்களைவிட இவ்வாளிகளையே வாங்குவார். சென்னையில் 1998க்கு பிறகு இந்த வியாபாரிகள் என் கண்ணில் அதிகம் படவில்லை. அவரது தேவை மக்களுக்கு குறைந்துவிட்டதா அல்லது அவரது வியாபாரம் படுத்துவிட்டதா என்பது தெரியவில்லை. வீட்டுக்கே தேடி வந்து பட்டுவாடா செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டதால் இவர்களது சேவையும், தேவையும் குறைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. காலப்போக்கில் மறையும் வர்த்தகங்களில் இந்த பண்டமாற்றும் மறைந்தது சோகமே.

காணாமல் போனவர்கள்! (பதிவு 6)

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தொண்ணூறுகள் வரையிலான கால கட்டத்தில் திருவிழாக்களிலும்,  கடற்கரைகளிலும், பொருட்காட்சிகளிலும், தெருவீதிகளிலும் வலம் வந்து, சிறார்களிடையே ஒரு மந்திரக் கலைஞராகப் பார்க்கப்பட்டவர் ‘ஜவ்வு மிட்டாய்’ விற்கும் தொழிலாளி. எல்லா வியாபாரிகளும் ஒருமித்ததுபோல் வைத்திருக்கும் ஒரு தடித்த குச்சியின் மேலே ஒரு பொம்மை காட்சியளிக்கும். அதற்குக் கீழே அந்த ஜவ்வு மிட்டாய் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். அந்த பொம்மையின் கைகளில் ஒரு சிறு ஜால்ரா இருக்கும். வியாபாரி வருவதை, அந்த பொம்மை தனது கைகளைத் தட்டி ஒலியெழுப்பி அறிவிக்கும். அந்த பொம்மையை அந்த வியாபாரி இயக்குவது நமக்குத் தெரியாவண்ணம் அவர் பார்த்துக் கொள்வார். இவர்களது மிட்டாயை வாங்கித் தராவிட்டால் எங்களது கொடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலும். விலை மலிவு என்பதாலும், எங்களது பெற்றோரும் எங்களுக்கு வாங்கித் தருவது வழக்கம்.

நாம் என்ன பொருள் வடிவில் மிட்டாய் கேட்கிறோமோ, அவர் சரியென்று, அந்த மிட்டாயின் கீழ்ப்பகுதியை நூல்போல இழுக்க, அதுவும் ஜவ்வுபோல நெகிழ்ந்து அவர் கையில் நீளும். பின்னர் அதை விதவிதமான பொருட்கள் வடிவில், சில நொடிகளில் உருமாற்றி நமது கையில் கட்டிவிட்டுவார். அதை சுவைக்க மனமின்றி வெகு நேரம் பார்த்த பின்னரே சாப்பிடும் வழக்கம். பொதுவாக பல சிறுவர்களும் விரும்புவது கைக்கடிகாரம். ஏனெனில் அது அக்காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒரு கருவி. எனவே மிட்டாய் வடிவிலாவது கடிகாரம் கையில் கட்டப்படுவது எங்களுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே கைப்பற்றிய மகிழ்வைத் தந்ததில் வியப்பில்லை. நாய், பூனை, கிளி, சூர்யகாந்திப்பூ, ஆகாய விமானம்  போன்ற பல வடிவங்களை கண்ணிமைக்கும் நேரத்தில், மிட்டாயைக் கொண்டு அவர் செய்யும் ஜாலவித்தையை, வாய்பிளந்து பார்த்து நின்ற அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. அக்கால கட்டத்தில் இன்றைய பெற்றோர் போல சுத்தம், சுகாதாரம் என்று தெருவில் விளையாட அனுமதிக்காத பெற்றோர்களை நாங்கள் பெறாதது எங்கள் பாக்கியம். அந்த விற்பனையாளர் தனது கைகளால்  தொட்டு செய்த, மிட்டாயை எங்களது கைகளில் கட்டி, பின்னர் நாங்கள் அதை முழுவதும் தின்றாலும், எங்களை எந்த நோய்நொடிகளும் அண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்க சுகாதார ஆச்சர்யம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கோவை கொடீசியா வளாகத்தில் நடந்த ஒரு பொருட்காட்சி யின் வெளியே நான் ஒரு ஜவ்வு மிட்டாய் வியாபாரியை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் மிட்டாயில் ஒரு வாத்து பொம்மை செய்து தரச் சொன்னேன். அவரிடம் பேசுகையில் அவர் செய்முறை பற்றி சொன்ன ரெசிப்பி மிகவும் எளிதாக இருந்தது. வெறும் சர்க்கரையைப் பாகு காய்ச்சி, இழுபடும் நிலையில் பதமாக இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, ஒரு தட்டில் ஊற்றி ஆறவைத்து, பின்னர் அதில் பிங்க் மற்றும் வேண்டிய வண்ணம் சேர்த்து ஒரு சுத்தமான கம்பில் முறுக்கிச் சுற்றினால் மிட்டாய் ரெடி. இவ்வளவு எளிதான செய்முறையாக இருக்கிறதே என்று நான் கேட்டபோது ‘அந்தப் பாகின் பதத்தில்தான் எங்கள் சூட்சமம் இருக்குதைய்யா; எல்லோருக்கும் அது வராது’ என்று அவர் சிரித்தார். இந்தத் தொழிலில் வருமானம் எப்படி என்றால் நான் எதிர்பார்த்தபடியே ‘உழுதவன் கணக்குப் பார்த்த மாதிரி’ என்றார். ‘ஆனால் சின்னக்குழந்தைகள் நான் செய்யும் மிட்டாய் பொம்மைகளை வியப்போடு பார்த்து சிரித்து உண்டு மகிழும்போது போது கிடைக்கும் சந்தோசம், அதுக்கு ஈடில்லை அய்யா’ என்றார்.

தனது பாட்டனார் மற்றும் தந்தை செய்த தொழிலை இப்போது அவர் செய்வதாகச் சொன்னார். ‘எனது பிள்ளைகளுக்கு இது வேண்டாம் என்று முடிவு செய்து அவர்களப் படிக்க வைக்கிறேன்’ என்றார். கோவை சூலூர் மற்றும் பொள்ளாச்சியில் சில குடும்பங்கள் இத்தொழில் செய்வதாகச் சொன்னார். பெங்களூரில் ‘பம்பாய் மிட்டாய்’ என்ற பெயரில் இதை விற்பனை செய்யும் ஆட்கள் உள்ளார்கள் என்றும் தகவலளித்தார். இவர்களது சமூகம் ஓரளவாவது இன்னும் மிஞ்சியிருப்பதாக அறிகிறேன். அதுவரையில் மகிழ்ச்சி. அவர்களது பொருளாதார நிலைதான் கவலைகொள்ள வைக்கிறது.  

காணாமல் போனவர்கள்! (பதிவு 5)

நம் நினைவில் வந்து போகக்கூடிய சில கதாபாத்திரங்களை பற்றி பதிவு செய்தபோது, மேலும் சிலர் எங்களையெல்லாம் நினைவில்லையா, என்று கேட்பதுபோலத் தோன்றியது. எனவே காணாமல் போன மேலும் சிலரைப் பற்றி இப்பதிவில்.

‘பூம்பூம் மாடு போல எல்லாவற்றுக்கும் ஏன் தலையாட்டுகிறீர்’ என்று சிலரை விமர்சிப்பதை நாம் கண்டிருக்கிறோம். அப்படி நமது வாழ்வியல் முறையில் கலந்துவிட்ட ஒரு விலங்கு அந்த ‘பூம்பூம் மாடு’. நன்கு அலங்கரிப்பட்டு, துணிகளால் மூடப்பட்டு, கொம்புகளில் வர்ணஜாலமும் குஞ்சலங்களும் மின்ன, கழுத்தில் மணிகளும் அணிவிக்கப்பட்டு ஒரு ராஜ கம்பீரத்துடன் நடந்து வரும் அந்த எருதினைப் பார்த்தால் சிவபெருமானின் வாகனம் போல காட்சியளிக்கும். அதை ஒட்டி வருபவரை “பூம்பூம் மாட்டுக்காரர்” என்று அழைப்போம். தலையில் தலைப்பாகை அணிந்து  கையில் உறுமி மேளமும், ஷெனாயும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் நின்று ஷெனாயால் முதலில் ஒரு இசை பாடுவார். பின்னர் தனது மாட்டிடம் அந்த வீட்டினை  வாழ்த்தச் சொல்வார். அதுவும் தலை ஆட்டி ஆமோதிக்கும். அதனிடம் பேசும்போது தனது உறுமி மேளத்தை இசைத்துக்கொண்டே பேசுவார். அவர் கூறுவதெற்கெல்லாம் தலையாட்டும் அந்த எருது. வாழ்த்துவது மட்டுமன்றி, எதிர்காலம் பற்றி குறி சொல்வதும் இவர்களது வழக்கம். அவற்றை சிவனின் நந்தியே ஆசீர்வதிப்பதுபோல நமக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவார் அந்த மனிதர். இவர்களும் அரிசி, துணிகள், பணம் போன்றவற்றை காணிக்கையாகப் பெறுவார்கள்.

இவர்களது சமூகம் நாடோடி போல சுற்றும் மலை வாசியினர் என்பது ஒரு கருத்து. தமிழ்நாடு, கேரளம் இரண்டு மாநிலங்களில்தான் இவர்களைக் காண முடிந்தது. ஆனால் இவர்கள் தமது ஊர் திருப்பதி என்று சொல்லிக்கொள்வார்கள். அக்காலத்தில் வாரா வாரம் தவறாது விஜயம் செய்யும் இவர்களது வரவு காலப்போக்கில் குறைந்து, மறைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு வருடங்கள் முன்பு நான் சென்னையில் மஹாபலிபுரம் தெருவில் வசித்தபோது ஒரு பூம்பூம் மாட்டுக்காரரைப் பார்த்தேன். சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, மீண்டும் ஒன்பது வயது சிறுவனாக மாறி, அவரது உறுமி மேள வாசிப்பையும் அவரது மாட்டின் உற்சாகத்தையும் முழுவதும் ரசித்தேன். ஒரு நூறு ருபாய் நோட்டை அவரிடம் நீட்டியபோது அவர் வியந்து பார்த்தது இன்றும் என் நினைவில்!

கையறுநிலை

அந்நாளில் இருந்த, பழகிய, ரசித்த நிகழ்வுகள், மனிதர்கள் அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது ‘பொம்மையைத் தொலைத்த குழந்தை’ போல ஒரு வெற்று உணர்வு தலைதூக்க இன்று வாழும் வாழக்கையில், சில ஆச்சர்யங்கள் தோன்றியது. ‘பெரிசுகள்’ என்ற அடைமொழியோடு வாழும் அறுபதுகளைக் கடந்த நம் தலைமுறை, அடிமை இந்தியாவில் கஷ்டப்பட்ட நமது பெற்றோர் தலைமுறையைவிடக் கொடுத்து வைத்தவர்கள்.

‘கீழ்நிலை நடுத்தர வர்க்கம்’ என்ற நிலையிலிருந்து ‘மேல்நிலை நடுத்தர வர்க்கம்’ என்ற நிலையை அடைந்திருக்கிறோம். பஞ்சம், ரேஷன், தட்டுப்பாடு என்ற நிலையிலிருந்து ‘உபரி’ என்ற நிலைக்கு வந்துள்ளோம். அண்ணாச்சி மளிகைக் கடைகளில் தொடங்கி, பல்சேவை சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்கள் வரை பார்த்து விட்டோம். இரண்டு நூற்றாண்டுகள் கடந்திருக்கிறோம். இரண்டு புத்தாயிரத்தைச் சந்தித்திருக்கிறோம். வானொலி, நாடகம், சினிமா, சர்க்கஸ் என்ற பொழுதுபோக்குளை மட்டும் அனுபவித்த நாம், இப்போது ஹை டெக் சினிமா, வீடியோக்கள், என்று நவீன தொழில் நுட்பத்தால் அடைந்த தொல்லைகளையும், வீட்டு அறைக்குளேயே முடங்கி அனுபவிக்கிறோம். தட்டச்சு சாதனத்தில் தொடங்கி இன்று கணிப்பான் கணனி திறன்பேசி ஹோலோக்ராம் என்று துரித எந்திரங்களுக்கு மாறியுள்ளோம்.

ஒரு சிறிய அறையில் சகோதரர்களுடன் பாயில் படுத்து, மின்விசிறி கூட இல்லாத நிலையில் பனையோலை விசிறியின் உதவியுடன் கொசுக்களை சமாளித்து, கிணற்றில் நீர் இறைத்து, மொண்டு குளித்து, பள்ளிக்கு நடந்தே சென்று படித்து, வளர்ந்த நாம் இன்று பெரிய மச்சு வீடுகளில் குளிர்சாதனக் கருவி சுகத்தை அனுபவித்தவாறு ஆடம்பரக் கார்களில் பவனி வருகிறோம். அன்றாடத் தேவைக்கே அல்லல்பட்ட நாம், இன்று தேவையில்லாத ஆடம்பர வெட்டிச் செலவுகளைக் கூச்சமின்றி செய்கிறோம். ஐயர், உடுப்பி உணவு விடுதிகளிலும், முனியாண்டி விலாஸிலும் இருபது ரூபாய்க்குள் உணவு உண்ட நாம், இப்போது பெரிய நட்சத்திர உணவு விடுதிகளில் ஆயிரக்கணக்கில் செலவழித்து, உணவை மிச்சம் வைத்து வீணடிக்கிறோம். வேர்க்க விறுவிறுக்க உழைத்த நாம், இன்று கையில் ஆரோக்கிய வாட்ச் கட்டிக்கொண்டு இதயத் துடிப்பைக் கணக்கெடுத்துக் கொண்டே உடற்பயிற்சி செய்கிறோம்

கூரை மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைகளில் முக்கால் ரூபாய் கட்டணத்தில் சாய்வுப் பலகையில் மர்ந்து, காலணா கடலை மிட்டாயை ருசித்துக்கொண்டே எம்ஜி ஆர், சிவாஜி, ஜெமினி படங்கள் பார்த்த நாம், இன்று மல்டிப்ளெக்ஸ் என்ற மன்றங்களில் இருநூறு ருபாய் கட்டணத்தில், நூற்று அறுபது ரூபாய்க்கு சோளப்பொரி வாங்கி கொறித்துக் கொண்டு, பாடாவதிப் படங்களை பார்த்து வைக்கிறோம். டேப் ரெக்கார்டர், கேசட் என்று தொடங்கி வீடியோ ரெக்கார்டர், சிடி, டிவிடி, ப்ளூ-ரே என்று பயணித்து இன்று யுஎஸ்பி என்ற மினி சாதனத்தில் ஐந்நூறு சினிமாக்களை சேமித்து வைக்கிறோம். இருபது இன்ச் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடங்கி, இன்று ஹால் முழுவதும் வியாபித்திருக்கும் எல்.இ.டி திரையில் முப்பரிமாண காட்சிகளை உயிரோட்டத்துடன் கண்டு மகிழ்கிறோம். கரகர ரேடியோ அருகில் கதை வைத்துக் கேட்ட நாம் இன்று ஹோம் தியேட்டர் என்று தெருமுழுதும் அலறும் அளவுக்கு சத்தமான ஒலிபெருக்கிகளில் பாடல்களை அனுபவிக்கிறோம். பலஆயிரம் செலவவழித்துக் காதில் தொங்கும் ஒலிக்கருவி மாட்டிக் கொண்டு திரிகிறோம்.    

‘பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தை வென்ற’ பிள்ளையார்’ போல ஒரு சிறிய கைபேசிக்குள் சுற்றி உலகையே வலம் வருகிறோம். நாட்கணக்கில் செல்லும் தபால் கார்டு, இன்லேண்ட் லெட்டர் மற்றும் அவசரத்துக்கு தந்தி என்ற தொடர்பு சாதனங்களில் தொடங்கி, முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப், இ மெயில், இன்ஸ்டாக்ராம் என்று நொடிக்குள் பயணிக்கும் தகவல்களை நண்பர் உறவினர் குழுவுக்கு அனுப்புகிறோம். நல்ல திரையிசை, நல்ல திரைப்படம் என்பதெல்லாம் போய், எப்போதாவது வரும் நல்ல படங்களை தேடிப் பிடித்துப் பார்க்கிறோம். வருடத்தில் தீபாவளிக்கு மட்டுமே ‘புதுத்துணி’ என்ற சோகத்திலிருந்து எப்போது நினைத்தாலும் புத்தாடை என்ற செலவீனத்தில் திளைக்கிறோம்.

என்றோ இல்லத்திற்கு வரும் உறவினர்களை ஆவலோடு பார்த்த காலம் போய், இன்று நினைத்தால் ஸ்கைப் மூலம் பார்த்துப் பேசுகிறோம். தமிழ் தெரியாத, அமெரிக்காவில் வாழும் பேரக் குழந்தைகளை நாம் வீடியோ மூலம் கொஞ்சும்போது அவர்களது வேற்றுமைத் தன்மையை உணர்கிறோம். வீட்டுக்குள் எத்தனை பேர்  இருந்தாலும் அனைவரும் அவரவர் கைப்பேசிகளில் மூழ்கியிருக்கிறோம். ஊருடன் ஒன்றுகூடிப் பேசிக் களித்து, பிறர் இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்ந்த நாம், இன்று அடுத்தவீட்டாரை யாரென்றுகூடத் தெரியாமல் அந்நியனாக நினைத்து ஒதுக்குகிறோம். ஆனால் முகநூலில் முன்னூறு நண்பர்கள் என்று பெருமை பேசித் திரிகிறோம். பண்டிகைகள் கொண்டாட்டங்கள் எல்லாம் சுருக்கப்பட்டுப் பேருக்குக் கொண்டாடுகிறோம். வீட்டில் செய்யும் அதிரசம், முறுக்கு, சீடை போன்ற இனிப்பு காரவைகள் எல்லாம் தயாரிப்பதை மறந்து, கிருஷ்ணா, ஆனந்தா என்று பலகாரக் கடைகளை நோக்கிப் படையெடுக்கின்றோம்.

இவ்வாறு நம் வாழ்வில் ஏற்பட்ட வளர்சிதை மாற்றைத்தை எழுதிக்கொண்டே போனால் பல பக்கங்கள் தேவைப்படும். எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாதது போலத் தோன்றும் ஒரு வெற்று நிலை நம் தலைமுறையினருக்கு கிடைத்த வரமா, சாபமா அல்லது தத்துவப் பாடமா என்பது புரியவில்லை. ‘ஊரோடு ஒட்ட ஒழுகல்’ என்ற முறையை முயற்சி செய்து வாழப் பழகலாம். அல்லது இதை அலசி ஆராய்வதைவிட, சௌகர்யமாக பழைய இனிய நினைவுகளில் திளைத்து காலம் கழிப்பதே சுகமென்று முடிவெடுத்து வாழலாம். உங்கள் விருப்பம்!

காணாமல் போனவர்கள்! (பதிவு 4)

நாம் எல்லோருக்கும் சிறு வயது ஆசைகள் பல உண்டு. நம் காலத்தில் அவற்றில் பெரும்பாலானவை நிறைவேறியதே இல்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் ஆசைப்படாமல் விட்டிருக்கோமா என்ன? ஒரு இசைக் கருவியாவது வாசிக்க வேண்டும் என்னும் அவா எல்லோர் மனதிலும் இருந்திருக்கக்கூடும் என்பது என் கருத்து. பூவரசன் இலையை எடுத்து சுருட்டி. ஊதி இசை பாடாதவர் அக்காலத்தில் யாரேனும் இருந்தால் அவர்களை சந்திக்க விருப்பம்.

எனது இளவயதில் என்னைக் கவர்ந்த இரண்டு இசைக்கருவிகள் புல்லாங்குழலும், கொட்டாங்கச்சி வாத்தியமும்தான். இவையிரண்டும் திருவிழாக்களில் கண்டிப்பாகக் கிடைக்கும். விலைகூட சில அணாக்கள்தான். ஒரு அடி நீளமான மூங்கில் குழாயில் கலர் அடித்து, சிறு துளைகள் இடப்பட்டிருப்பது புல்லாங்குழல், ஓரு கொட்டாங்கச்சியில் சிறு கம்பை இணைத்து அதன்மேல் இறுக்கிக் கட்டிய ஒரு மெல்லிய கம்பியுடன் காட்சிதரும் ஒரு நாட்டுப்புற மினி வயலின் கருவிதான் ‘கொட்டாங்கச்சி வாத்தியம். இந்த இரண்டு வாத்யங்களையும் விற்பவர்கள் பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் வீதி தோறும் வாசித்துக் கொண்டு வருவார்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழல் ஓசை எப்படியோ தெரியாது; ஆனால் இவர்கள் வாசித்த தமிழ் சினிமாப் பாடல்களுக்கு நான் மயங்கியிருக்கிறேன்.

அம்மாவிடம் கெஞ்சி. அழுது புரண்டு, அந்தப் புல்லாங்குழலை வாங்கி, வாசிக்க முயற்சி செய்திருக்கிறேன். நாம் ஊதினால் அதில் பாடல் என்ன, ஒரு இனிமையான இசை கூட வராது. என்பது என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை. நான் விடாப்பிடியாக முயற்சித்தபோது என் தாயார் அடுப்பூதும் ஊதாங்குழல் சத்தம்தான் வந்தது. முறையாக இசை கற்றவர்களால்தான் இதையெல்லாம் வாசிக்க முடியும் என்று எனது அக்கா சொல்வதை பொருட்படுத்தாமல் தினமும் பயிற்சியும் முயற்சியும் செய்தேன். இருப்பினும் கடைசி வரை அடுப்பூதும் சத்தமே கேட்டது. கிராமத்தானைபோல் இருக்கும் அந்த வியாபாரி எந்த வகுப்பில் சங்கீதம் கற்றார் என்ற சந்தேகம் பல வருடங்கள் இருந்தது எனக்கு. என்னை ஏமாற்றி, தவறான குழலை விற்றிவிட்டார் என்று அவரை தினமும் சபித்தவண்ணம் இருந்தேன். என் நண்பர்களும் அதற்கு தூபம் போட்டு “ஆமாண்டா அவனிடம் இருக்கும் குழல் மட்டும்தான் வாசிக்கும்  நமக்கெல்லாம் அவன் தந்தது வெறும் குச்சி” என்று வெறுப்பேற்றினார்கள்.

அதேபோல கொட்டாங்கச்சி வாத்தியக்காரர் வீதியில் வாசித்துக்கொண்டு வருகையில் அவர் பின்னாலே வாண்டுகள் பட்டாளம், pied piper பின் சென்ற எலிகள் போல தொடர்ந்து வருவார்கள். ‘கொஞ்சி கொஞ்சி பேசி’ என்ற பி. சுசீலாவின் பாடல், பல வாத்யக்காரர்களின் ஆஸ்தான பாடலாகும். மிகவும் லாவகமாக அந்த வாத்யத்தை அவர் வாசிக்கும்போது அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நம் வீட்டில் உட்காரவைத்து, அவரைக் கேள்விக்கணை கொண்டு துளைத்து, பல பாடல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்போம். மேலும் அவரை வேறொரு வாத்தியத்தை எடுத்து வாசிக்கச் சொல்லி, இவ்வாறாக நான்கைந்து சோதனைகளுக்குப்பிறகு அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கினேன். எனது அக்காவின் எச்சரிக்கையையும் மீறி இந்தக் கருவியையும் முயற்சித்தேன். ஆனால் நான் வாசிக்கும்போது பிரசவ வலியில் கத்தும் பூனையைப் போல சத்தம்தான் வந்தது. எனது தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி, எதோ மனம் போன போக்கிலே வாசித்து, எனக்குப் பிடித்த பாடலை வாசிப்பதுபோல கற்பனை செய்து, என் மனக் காயத்தை ஆற்ற முயற்சித்திருக்கிறேன். எனது இசைப் பயிற்சி இல்லாத தன்மையை ஒப்புக்கொள்ள மனமின்றி அந்த வாத்யக்காரர்களே ‘ஏமாற்றுப் பேர்வழிகள்’ என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் என் பள்ளி நண்பர்களுடன் இதைப்பற்றி பேசியபோது அவர்களுக்கும் என் போன்ற அனுபவம்தான் என்று அறிந்தபோது ‘யான் பெற்ற  துன்பம் பெறுக இவ்வையகம்’ என்று மனம் சாந்தி அடைந்தது.

சமீபத்தில் ஒரு பதிவில் சீர்காழியை சேர்ந்த ராமு என்பவர் கொட்டாங்கச்சி வாத்யக் கருவியை மட்டும் பயன்படுத்தி ஆயிரம் கச்சேரிகள் செய்ததாக படித்தபோது இந்தக் கருவிகளின் அந்த நாளைய வியாபாரிகள் நினைவு வந்தது. இனிய இசை வெளிவர மிகப் பெரிய விலைமதிப்பான கருவிகள் ஏதும் வேண்டியதில்லை என்ற எளிய தத்துவத்தை நமக்கு உணர்த்திய அந்த ஏழை வியாபாரிகள் இன்று மறைந்தோ, குறைந்தோ போய் விட்டார்கள். ஆனால் அவர்களுடன் எங்களுக்கிருந்த நட்பும் அனுபவமும் போகவில்லை; பசுமையாக இன்றும் இருக்கிறது. இன்றைக்கும் அறுபதுகளில் வந்த ‘கல்லும் கனியாகும் ‘ படத்தின் பாடல்களைக் கேட்டால் அந்த வாத்தியத்தின் மகிமை புரிந்து ரசிக்க முடிகிறது.

காணாமல் போனவர்கள்! (பதிவு 3)

நமது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்கள் காலப்போக்கில் பல மாறுதல்களை சந்தித்துள்ளன. எனது இளம் வயதுக் காலமான அறுபதுகளில், எங்கள் வீட்டில் பல பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் இருந்தன. ‘எவர்சில்வர்’ என்று வர்ணிக்கப்படும் துருப்பிடிக்காத இரும்பு பாத்திரங்கள் பிரபலமாக வரத் தொடங்கிய காலமது. இருப்பினும் பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக உபயோகித்து வந்த பித்தளை பாத்திரங்களுக்கு மவுசு குறையாமல் பயன்பாட்டில் இருந்தன.

பித்தளை, செம்பு, வெண்கலப் பாத்திரங்களுக்கு உள்ள பெரிய பிரச்னை அவற்றில் களிம்பு படிவது. அதைத் தடுக்க அவற்றுக்கு ஈயம் பூசும் வழக்கம் அவசியமானது. ஈயம் என்றால் அசல் ஈயம் அல்ல. டின் என்று சொல்லப்படும் தகரம் பூசுவதுதான் அப்படி சொல்லப்பட்டது. கலாய் பூசுவது என்ற பெயரும் இதற்குண்டு. இதை பரம்பரையான குலத் தொழிலாக செய்த சமூகங்கள் இருந்தன. இவர்கள் கிராமந்தோரும் நகரந்தோரும் அடிக்கடி சென்று, வாடிக்கையாளர்களிடம் பாத்திரங்களை வாங்கி, ஊரில் ஓரிடத்தில் அவர்களது தற்காலிகப் பட்டறையை நிறுவி, ஈயம் பூசுவார்கள். நான் கிராமத்தில் படித்த காலத்தில் அவர்களது செய்முறையைப் பார்த்திருக்கிறேன். கைதேர்ந்த கலைவண்ணம் அவர்களது தொழிலில் இருக்கும்.

அவர்கள் ஊரில் ஒரு ஒதுக்குபுறமான இடத்தை தேர்வு செய்து தங்களது உலைக்களத்தை  அமைப்பார்கள். பொதுவாக அது ஒரு மர நிழலில் இருக்கும். பின்னர் ஊரினுள் சென்று பாத்திரங்களை சேகரித்து வருவர். ஊர் மக்களும் அவர்களை நம்பி தமது வீட்டுப் பத்திரங்களைத் தருவர். பின்பு கலாய் பூசுபவர் ஒரு பள்ளம் தோண்டி, தான் கொண்டு வந்த நிலக்கரித் துண்டுகளை அதில் நிரப்பி தீ மூட்டுவர். பின்னர் ஒரு காற்றுத் துருத்தியை அதன் பக்கத்தில் வைத்து அதன் இரு கைபிடிகளைப் பற்றி அழுத்தி காற்றை வேகமாக கரியின்மீது படரச் செய்வர். கலாய் பூசத் தொடங்குமுன், பாத்திரத்தை சோடா உப்பு கொண்டு துலக்குவர். பின்னர் அதை கொழுந்துவிட்டு எரியும் தீயின் மீது காட்டி சூடாக்குவர். பின்னர் ஒரு பெரிய கிடுக்கியால் பத்திரத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கிடுக்கியால் தகரப்பட்டைகளை பாத்திரத்தின் உள்பக்கம் பூசுவர். பின்னர் அம்மோனியா உப்பை அதன் மேல் தூவி சீராக ஒரு துணியால் பாத்திரம் முழுதும் தேய்ப்பர். அம்மோனியா வாடையுடன் எழும் வெண்புகையை சுவாசிப்பது கெடுதல் தரும் என்பதால், முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொள்வர். சிலர் மூக்கைத் துண்டால் மூடிக்கொள்வதும் உண்டு. பாத்திரம் உள்பக்கம் சீராக வெள்ளிபோல் மின்னும். அதைப் பார்த்து திருப்தி அடைந்த அந்தக் கலைஞர் பின்னர் பாத்திரத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழூவி சுத்தம் செய்வர். இப்போது புதிது போல் மின்னும் பாத்திரம் வாடிக்கையாளர்  இல்லத்துக்கு திரும்பிச் செல்ல தயார்நிலையில்! சிலர் வாரக்கணக்கில் ஒரு ஊரில் தங்கி ஏறத்தாழ எல்லா வீட்டுப் பாத்திரங்களையும் ஈயம்பூச ஏற்பாடு செய்துவிடுவதையும் கண்டிருக்கிறேன்.

ஈயம் சில மாதங்களில் தேய்ந்துவிடும் அபாய நிலை உள்ளதால் இவர்கள் சில மாதங்களில் மீண்டும் அந்த ஊருக்கு வந்து தங்கள் சேவையை செய்வர். செலவு போக இவர்களுக்கு என்ன மிஞ்சும் என்று கணக்குப் பார்த்தால் ஒன்றுமில்லை என்று தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தும் அத்தொழிலை விடாமல் ஒரு தார்மீகக் கடமையாக அவர்கள் செய்வது போல எனக்குத் தோன்றும்.

காலப்போக்கில் பாத்திரங்கள் மாறியபோது இவர்களின் கதாபாத்திரங்களும் மறைந்து போயின. பழையன கழிதலில் இத்தகைய மக்களும் அடக்கம் என்பது ஒரு வேதனையான விஷயம்! ஆனால் இவர்களும் தமது தொழிலை மாற்றி, நன்கு வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்  என்று வாழ்த்துவோம்.

காணாமல் போனவர்கள்! (பதிவு 2)

இன்று தெருவுக்குத் தெரு மலிந்து கிடக்கும் கடைகள் என்றால் அவை ‘fancy store’ என்று அன்புடன் வர்ணிக்கப்படும் கடைகள்தான். சிறார்களுக்கும் பெண்களுக்கும் பலவித பொருட்கள் கிடைக்கும் ஒரு சிற்றங்காடி. கண்ணுக்கே தெரியாத வடிவில் உள்ள பொட்டு முதல் வளையல்கள், விதவித சங்கிலிகள் வரை எல்லாம் கிடைக்கும் அட்சய பாத்திரம். ஆனால் எனது சிறுவயதில் இப்படிப்பட்ட கடைகள் மிகவும் குறைவு. பொதுவாக கோவில் திருவிழா மற்றும் வருடாந்தர பொருட்காட்சி போன்ற சமயங்களில்தான் ‘மாயா பஜார் ‘ போன்று இத்தகைய கடைகள் முளைக்கும்.

அந்நாளில் பெண்கள் சாந்துப் பொட்டுதான் பெரும்பாலும் உபயோகிப்பார்கள். ஒட்டுகிற பொட்டு கிடையாது. ஏழை முதல் பணக்காரர் வரை பெண்களின் முக்கியமான ஒரு அணிகலன் கை வளையல். தினந்தோறும் அணிந்திருக்கும் வளையலை வைத்தே ஒருவரது பொருளாதார அந்தஸ்தை சொல்லிவிடலாம். ரப்பர் வளையல் என்றால் பெரும்பாலும் ஏழைகள். கண்ணாடி மற்றும்  கவரிங் வளையல் என்றால் நடுத்தர வர்க்கம். தங்க,  வைர, முத்து வளையல் என்றால் செல்வந்தர்கள். ‘வளைகாப்பு’ என்பது நம்ம ஊரில் கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்தப்படும் ஒரு விசேஷ நிகழ்வு. அவருக்கு கிட்டத்தட்ட முழங்கை வரை பலவித வளையல்கள் அணிவித்து ஒரு அம்மன் சிலை போல ஆக்கிவிடுவார்கள்.

வளையல்களையும் தமிழ்ப் பெண்களையும் எந்நாளும் பிரிக்க முடியாத நிலை அன்றிருந்தது. இதைப் புரிந்ததாலோ என்னவோ அந்நாளில் வீட்டு தேடி வந்து வளையல் விற்கும் வியாபாரிகள் உண்டு. பொதுவாக ‘வளையல் செட்டியார்கள்’ என்று அழைக்கப்படும் இவர்களுக்கும் ஒரு தனி முத்திரை உருவம் உண்டு. இவர்களிலும் பெரும்பாலானோர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். மீசையும் நெற்றியில் நாமக் குறியீடும் இருக்கும். தமிழ் நன்றாக, (ஆனால் சற்று தெலுங்கு வாடையுடன்) பேசுவார்கள். மருத்துவர்களைத் தவிர இவர்களுக்கும் எந்தப் பெண்ணின் கையையும் பிடிக்கும் உரிமை தரப்பட்டிருந்தது. எந்த சிறிய அளவு வளையலைக் கூட லாவகமாக பெரிய கைகளில் அணிந்துவிடும் மாயாஜால வித்தகர்கள். உணவு விடுதி சர்வர்கள், வேகமாகப் பலகாரங்கள் வகைகளை ஓப்பிப்பதுபோல, இவர்களும் தங்களிடமுள்ள வளையல் வகைகளை வெளிப்படுத்துவார்கள். ரப்பர், கண்ணாடி, நெகிழி, உலோகம் போன்ற மூலப்பொருட்களால் ஆன வளையல்கள், கங்கணம், வங்க்கி வளையல், வேலைப்பாடுகள் நிறைந்த ராஜஸ்தான் வளையல்கள், ஹைதராபாத்  முசல்மான்கள் செய்யும் கற்கள் பதித்த வளையல்கள் போன்ற எல்லா உருப்படிகளும் அவர்களது (கிறிஸ்துமஸ் தாத்தா வைத்திருப்பது போன்ற) ராட்சஸப் பையினுள் இருக்கும்.

வந்து ஒரு வீட்டில் அமர்ந்தால், அக்கம் பக்கம் உள்ள வீடுகளிலிருந்து வயதுப் பெண்கள் முதல், மூதாட்டிகள் வரை வந்து கூடிவிடுவார்கள். வியாபாரம் முடிய, குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும். இவருக்கு மோர் உபசாரங்கள் நடக்கும். ஆயர்பாடி கிருஷ்ணனைப் போல் மங்கையர் சூழ, ஜமுக்காளம் அல்லது பாயில் அமர்ந்து, வளையல் ராஜாங்கம் நடத்தி, பலவித வளையல்களையும் விற்று விடுவார்கள்.அடுத்த முறை வருகையில் கொண்டு வர விசேஷ ஆர்டர்களும், முன்பதிவுகளும் நடக்கும். பெண்களின் சிரிப்பு சத்தங்களும் வளையல் சத்தங்களும் கலந்து ஒலிக்கும். Amazon, Flipkart போன்ற கம்பெனிகளின் முன்னோடிகள்தான் இந்த ‘டோர் டெலிவரி’ வளையல்காரர்கள். அடுத்த முறை வருகையில் முன்பு விற்ற வளையல்களில் ஏதேனும் குறைபாடு சொன்னால் அவற்றை எடுத்துக்கொண்டு புது வளையல்கள் தரும் யோக்கியமானவர்கள். அக்கால காலச்சாரத்தின் பிம்பங்களில் இவர்களது பங்கு முக்கியமானது. வேறு எந்த நாட்டிலாவது இத்தகைய வளையல் கலாச்சாரம் உள்ளதா என்று தெரியவில்லை

அக்கால தமிழ் சினிமாக்களில், நாயகர்கள் நாயகியை ரகசியமாக சந்திக்க இத்தகைய வளையல் வியாபாரிகள் வேடத்தில் வருவது வாடிக்கை. ஜெமினி கணேசனும் NS. கிருஷ்ணனும் ‘ஆசை’ படத்தில் ‘வளையல்’ என்று பாடிக்கொண்டே வருவதும், ‘படகோட்டி’ படத்தில் எம் ஜி ஆர் ‘கல்யாணப் பொண்ணு’ என்று பாடிக்கொண்டு வளையல்கள் கொண்டு வருவதும் நமது தலைமுறையினர் ரசித்த காட்சிகள். இத்தகைய வளையல்காரர்கள் வர்க்கமும் காணாமல் போய்விட்டது, காலத்தின் கோலம், மற்றும் சோகம். இவர்களது வருகைக்காக ஏங்கிய பெண் குலமும் முற்றிலும் மாறிவிட்டது. இவர்களை பழைய திரைப்படங்களில் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டியதுதான். ‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடுவின் Bangle sellers கவிதையைப் படித்தால் எனது பதிவின் அர்த்தம் புரியும்.

…………………

காணாமல் போனவர்கள்! (பதிவு 1)

இன்று ஐம்பது, அறுபது மற்றும் கூடுதல் வயதானவர்கள் அனைவராலும் இந்தப் பதிவினைப் புரிந்து கொள்ள முடியும். நம் இளமைக் காலத்தில் வழக்கில் இருந்த பல விஷயங்களும், உணவுப்பண்டங்களும், ஏன் சிலவகை மனிதர்களும் கூட கால வெள்ளத்தில் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப்பற்றிய என் நினைவுகளை இங்கு பகிர்ந்துகொள்ள விருப்பம். பலரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, காலங்களை அசை போடும் வேளையில், இது போன்ற நினைவுகளை ஆய்வு செய்தால், எதையோ தொலைத்தது போல் உணர்வு வருவது எனக்கு மட்டும்தானா என்ற கேள்வி எழுகிறது.

சிறுவயதில் ஊரே உறங்கும்போது, நான் மட்டும் இரவு 12- 1 மணி வரை விழித்திருப்பது எனது வழக்கம். ‘பின் தூங்கிப் பின் எழுபவன்’ நான். ‘ஏண்டா பேய் அலையுற நேரமாகியும் முழுச்சுக்கிட்டுருக்க; பேசாம தூங்கு, இல்லைன்னா மோகினி வந்து தூக்கிட்டுப் போயிடுவா’ என்ற அம்மாவின் அதட்டல் எல்லாம் என்னைத் தொட்டது கூடக் கிடையாது. ஆனால் மோகினியும் வந்ததில்லை; தூக்கமும் வந்ததில்லை. ஆனால் திடீரென்று நள்ளிரவில் ‘குடுகுடுப்பைக்காரன்’ என்று அழைக்கப்பட்ட நபர், ஒரு விசித்திரமான தமிழிலில், நமது வருங்கால நிகழ்வுகளை குறி சொல்லிக் கொண்டு செல்வது மட்டும் நடக்கும் வழக்கம்.

அவரது சிறிய உடுக்கை போன்ற ‘குடுகுடுப்பை’ என்ற அந்த கருவியிலிருந்து வரும் அந்த சப்தம் அமானுஷ்யமானது. அந்த மினி உடுக்கைக்குக் கீழே ஒரு வர்ணஜாலத் துணியை வால் போல் கட்டியிருப்பார்கள். அதைக் கையில் பிடித்து லாவகமாக சுழற்றும்போதுதான் அந்த வினோத சத்தம் பிறக்கும். அது நமக்கு ஒரு இனம் புரியாத பய உணர்வை ஏற்படுத்தக் கூடியது. (மற்றவர்க்கு எப்படியோ, எனக்கு சிறுவயதில் அப்படித்தான் தோன்றும்)! ‘ஜக்கம்மா சொல்கிறாள்’ என்று இறைவி பெயரில் அவர் கூறும் வாக்கு பலிக்கும் என்று என் தாயார் சொல்வார்கள். பொதுவாக ‘நல்ல காலம் பொறக்குது’ என்று அவர்கள் சொல்வது வழக்கம். ‘இந்த வீட்டு அய்யாவுக்கு ஒரு நல்ல சேதி நாலு நாளில் வருது’ போன்ற சில வடிவங்களில் அவர்கள் குறி சொல்வார்கள். ‘திசை பொறக்குது’ என்று அவர்கள் சொல்வது அப்போது எனக்குப் புரிந்ததில்லை. ‘திசை என்பது ஏற்கனவே இருப்பதல்லவா, அது எப்படிப் பிறக்கும்’ என்ற ஐயம் எனக்குண்டு. பொதுவாக நல்ல விஷயங்களையே கூறும் அவர்கள் ஏதேனும் துர்வாக்கு சொன்னால் ‘நிச்சயம் அது நடந்தே தீரும்’  என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அந்நாளில் அதிகம். ஆனால், அக்காலத் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமே இவர்கள் கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டது.

அந்த ஆன்மாக்களை நான் பகலில் பார்த்திருக்கிறேன். ஒருவித சிக்கலான தலைப்பாகை அணிந்துகொண்டு சட்டையின் மேல் ஒரு கருப்பு நிறக் கோட்டுடனும், பெரிய மீசையுடனும் பலர் காட்சியளிப்பர். அவர்களது உடைகளில் வானவில் நிறங்கள் அனைத்தும் நிறைந்திருக்கும். நெற்றியில் சைவ, வைஷ்ணவக் குறியீடுகள் கருப்பு வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இடப்பட்டிருக்கும். அந்த ஒப்பனையில் அவர்களைப் பார்க்கும்போது நாடிழந்த அரசர்கள் போல் காட்சி தருவர். சில தென் தமிழ் கிராமங்களில் அவர்களை ‘கோடாங்கி’ என்றும் அழைப்பார்கள். அவர்கள் குறி சொல்லும் ‘கோடாங்கி சாஸ்திரம்’ என்பது கிருஷ்ணன் கோடாங்கியாக வந்து, மறைந்து வாழ்ந்த பாண்டவர்களுக்கு ‘நல்ல காலம் பிறக்கும்’ என்று ஜோதிடம் சொன்னதிலிருந்து பிறந்ததாக ஒரு நாட்டுப்புறக் கதையுண்டு. எனவே இவர்கள் தங்களை கிருஷ்ண வம்சத்தினராகக் கருதினர் என்பதும் ஒரு எழுதப்படாத வரலாறு.

அவர்களது தமிழையும், ஜக்கம்மாவை வணங்கும் தன்மையையும் சேர்த்துப் பார்த்தால் அவர்கள் தெலுங்கு தேசத்தவர் என்று புரியும். அவர்களது தோளில் தொங்கும் துணிப் பையில் பல சட்டைகள் நிறைந்திருக்கும். வீட்டில் அரிசி, பணம் மற்றும் பழைய கிழியாத சட்டைகள், வேட்டிகள் இருந்தால் அவற்றை நம்மிடமிருந்து அன்போடு பெற்றுக் கொள்வார்கள். இவர்களைப்பற்றிய Urban legendகள் பல உண்டு. சுடுகாட்டில் நள்ளிரவில் மண்டையோடு தோண்டியெடுத்து, அதில் மை செய்து வைத்திருப்பார்கள் என்றும், அவர்கள் சாபமிட்டால் அது பலிக்கும் என்றும் கதைகள் உண்டு. எனவே அவர்களிடம் வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது  என்று பெரியோர்கள் அறிவுரை கூறுவது அநேகமாக எல்லோர் வீட்டிலும் நடக்கும் நிகழ்வு.

ஆனால் என் பள்ளி நண்பர்களுடன் நான் தினமும் வரும்போது ஒரு வயதான குடுகுடுப்பைக்காரர் எங்களுக்கு நண்பரானார். அவருடன் ஒருவித அச்சத்துடனேயே நாங்கள் பேசுவது வழக்கம். ஐம்பது வயது கடந்தவர் போல் ஒரு தோற்றம். மிகவும் கூரிய பார்வையுடைய அவரது கண்களைப் பார்க்க முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக பழகிவிட்டது. அவரது தமிழைப் புரிந்து கொள்வது சற்று சிக்கலாக இருந்தது. ஆனால் அவர்களைப் பற்றிய அச்சம் விலகிவிட்டது. ‘ ஒரு சாண் வயித்துக்கு’ என்று அவர் பேச்சினூடே அடிக்கடி சொன்னது மட்டும் இன்றும் என் நினைவில்! இவர்கள் பரம்பரை இப்போது எங்கே என்று தெரியவில்லை. பலர் படித்து முன்னேறியிருக்கலாம். சிலர் உண்மையான ஜோதிடர்களாயிருக்கலாம். இவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் என் வகுப்புத் தோழர் ஒருவர், இவர்களில் பலபேர் மதம் மாறிவிட்டதாகவும், சிலர் நன்கு படித்து அமெரிக்க போன்ற நாடுகளுக்கு சென்று விட்டதாகவும் கூறினார். ஆனால் இவர்களது எளிய குடுகுடுப்பைக் கலைத்திறன் இன்று காணாமல் போய்விட்டது ஒரு சோகம்தான்.

சமீபத்தில் வந்த ஒரு ஒரு தமிழ்படத்தில் ஒரு குடுகுடுப்பைக்காரர்  சபிப்பதுபோல் வந்த காட்சியைப் பார்த்தபோது, எனது மறைந்திருந்த இளவயது அனுபவம் மீண்டும் என் மூளையின் ஓரத்திலிருந்து வெளிப்பட்டதால் இந்தப் பதிவு.