காணாமல் போனவை 4

ஒலிப்பதிவுப் பெட்டி (Audio recorder) (நாடாப் பதிவு, ஒலிப்பதிவன்)  எழுபதுகளில் தொடங்கி இருபதாண்டுகள் முன்வரை எங்கும் கோலோச்சிய ஒரு அற்புதக் கருவி. இசைப் பிரியர்கள் விரும்பிய இசையை, அவர்கள் செவிகளுக்கு வழங்கிய சாதனம்! பத்தாண்டுகள் முன்னர் பிறந்த குழந்தைகள், இக்கருவியை அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டிய நிலைதான்  இன்று! கடந்த முப்பதாண்டுகளில் விஞ்ஞானம் பற்றும் மின்னணுவியலில் ஏற்பட்ட துரிதமான முன்னேற்றம், கடந்த இரு நூற்றாண்டுகளில் ஆன மாற்றங்களைவிட மிகுதியானவை என்றால் மிகையல்ல. ஒலியின் அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி, ஒரு நாடாவில் சேமித்து அதன்பின் அதை நாம் இயக்குகையில், மின்காந்த அலைகள் மீண்டும் ஒலியலைகளாக நம் செவிகளுக்கு வந்துசேரும் வண்ணம் அமைக்கப்பட்ட இக்கருவி, டேப் ரெக்கார்டர், காஸெட் ரெக்கார்டர் (Tape recorder, cassette recorder) என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.

முதலில் மின்காந்த நாடாவுக்கு பதில் வேறு சில பயன்படுத்தப்பட்டன. முதன் முதல் இத்தகைய கருவிக்குக் காப்புரிமை பெற்றது (1886) அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல்லின் வோல்டா பரிசோதனைக் கூடம்தான்! ஆனால், ஜெர்மானியர்கள் இத்துறையில் அசுர வேகம் பெற்றுப் பல கருவிகளைக் கண்டுபிடித்த காலத்தில், ஜெர்மனியின் AEG நிறுவனம் 1934ல் மாக்னெட்டோஃபோன் (Magnetophone) என்ற பெயரில் தயாரித்து உலகுக்களித்தது. தொழில் நுட்பம் வளர வளர, பெரிய வடிவில் இருந்த இக்கருவி சுருங்கத் தொடங்கி, பெல்ஜியத்தில் ஃபிலிப்ஸ் நிறுவனம் காம்பாக்ட் கேசட் (Compact cassette) என்ற கைக்கடக்கமான ஒலி நாடாவைக் கண்டுபிடித்து 1962ல் விற்பனைக்கு விட்டனர். ஒலிப்பதிவுக் கூடங்கள் மற்றும் வானொலி நிலையங்களில் பெரிய அளவு ஸ்பூல் டேப் (Spool tape) பயன்பாட்டில் இருக்கும். வீடுகளில் அத்தகைய கருவிகளை வைத்திருந்தவர்களும் அந்நாளில் உண்டு.

ஐம்பதுகளுக்குப்பிறகு ஜப்பானிய நிறுவனங்கள் இந்த ஒலிநாடா உலகை ஆளத் தொடங்கிவிட்டனர். சோனி (Sony), சான்யோ (Sanyo), அக்காய் (Akai), பானாசோனிக் (Panasonic) டிடிகே (TDK) போன்ற நிறுவனங்கள் இத்தகைய கருவிகளை சந்தையில் வெள்ளமென ஓடவிட்டனர். சோனியின் வாக்மான் (Walkman) என்ற கைக்கடக்கமான ஒலிக்கருவி மிகவும் உலகப் புகழ் பெற்றது. முதலில் அனலாக் (analogue – ஒப்புமை) வடிவில் எல்லாப் பக்கமும், ஒரே அளவு கேட்கும் ஒலிகளைத்தான் இந்தக் கருவிகள் தந்தன. அதன் பின்னர் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், இருபக்கமும் இருவித ஒலியலைகளைக் கேட்கும் ஸ்டீரியோ (stereo) வந்தது. தற்போது முப்பரிமாணத்தில் நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் ஒலிகேட்கும் தொழில் நுட்பம் Dolby surround, Atmos, DTS, என்றெல்லாம் வந்துவிட்டன. ஆனால் இவையெல்லாம் வருமுன்னரே இக்கருவி மறைந்துவிட்டது சோகம்!

நான் முதன் முதல் (1980) வாங்கிய நாடாப் பெட்டி தனியானதல்ல. ஒன்றில், இரண்டு (Two-in-one) என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வானொலி மற்றும் ஒலி நாடாக்கருவி. Akai என்ற ஜப்பானிய நிறுவனத்தினுடையது. அப்போது ஒலி நாடாக்கள் C60, C90 என்ற இரு வடிவங்களில் வரும். முறையே அறுபது மற்றும் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியவை. ஒரு பக்கம் முடிந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தைக் கேட்கவேண்டும். இதில் C60 நாடாவை வாங்குவது உத்தமம்; C90 அடிக்கடி சிக்கிக்கொள்ளும் என்று வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் நான் C90 நாடாக்களைத்தான் அதிகம் பயன்படுத்தியுள்ளேன். இந்த நாடாக்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து அதனை நிறுவனங்களுக்கும் வழங்கிய ஜப்பானிய நிறுவனம் டிடிகே (TDK) ஆகும். இத்தகைய ஓலி நாடாக்கள் பல இசை நிறுவனங்களால் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, துல்லியமான இசையுடன் வரும். மேலும், பல சிறிய கடைகளில் நாம் விரும்பும் பாடல்களை அவர்கள் ஒலிப்பதிவு செய்தும் தருவார்கள். நமது வானொலி ஃஎப். எம் அலைவரிசையில் வரும் பிடித்த பாடல்களை நாமே பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. (எனது மகன் குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அவனது பத்து வயதுவரை அழுத, பேசிய, பாடிய குரல்களைப் பதிவு செய்த நாடாவை இன்றும் வைத்திருக்கிறேன்). இரவில், மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு, பி.சுசீலா, ஜானகி, ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரின் மெல்லிசையை இக்கருவி வழியே ரசித்த காலங்கள் மீண்டும் வாராது! தொண்ணூறுகளில் சென்னையில் வந்து அடைக்கலமானவுடன். ஸ்டீரியோ ரெக்கார்டர் வாங்கி இசை ஞானியின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தது ஒரு கனவுக்காலம். இருப்பினும், இன்றும் என் இதயத்தை வருடுவது தொழில் நுட்பம் குறைவான காலத்தில் (1950 – 1980) வந்த ஹிந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களே!

ஒலி நாடாவின் மகத்துவம் குறைந்தது, அடுத்த கண்டுபிடிப்பான ஒலித்தட்டு (Compcat disc-CD) வந்த பின்புதான். இதில் இசையின் துல்லியம் இன்னும் அதிகம். பல நிறுவனங்கள் ஒன்றில் மூன்று (3 in 1 – Radio, tape recorder & CD player) வடிவில் புதுக்கருவியை அறிமுகம் செய்தனர். பிறகு அதுவே ஒன்றில் ஐந்து (5 in 1) ஒன்றில் ஏழு (7 in1) என்று அவியல் கணக்கான வடிவங்களில் வந்து விரைவிலேயே காணாமலும் போயின! ஒலிப்பதிவு போல நாடாவில் ஒளிப்பதிவும் (compact video) பெற்று வந்த வீடியோ கருவிகள் சந்தைக்கு வந்தபோது நடந்தவை இவை!

என் மகனுக்கு நான் பரிசளித்த ஃபிலிப்ஸின் ஒன்றில் ஐந்து (5 in 1) கருவியை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அவ்வப்போது அதில் என்னிடமுள்ள காஸட் டேப் மற்றும் டிஸ்க் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்வதுண்டு. கிராமபோன் விற்றதைப்போல இதையும் விற்றிருந்தால், என் துணையார் என்னை விவாகரத்து செய்திருந்தாலும் வியப்பதற்கில்லை இப்போது என்னிடம் வீடியோ காஸட் பிளேயர் (VCR), டிவிடி பிளேயர் (DVD), ப்ளூ ரே பிளேயர் (Blu-Ray), மற்றும் நூற்றுக்கணக்கான audio cassette tapes, video tapes, DVDs, Blu-ray discs எல்லாம் பரணில் ஓய்வெடுக்கின்றன. என் மகனின் சந்ததியர், இவற்றைக் காட்சிப் பொருளாகவும், பாட்டன் சொத்தாகவும் பாதுகாத்தால் மகிழ்வேன்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றியுடன்!

  1. Magnetophone
  2. Spool tape recorder
  3. Two in one Mono
  4. Akai two in one stereo
  5. Philips five in one stereo

Leave a comment