காணாமல் போனவை 2

கிராமஃபோன் என்பது நான் சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு பாடல் பாடும் கருவி. என் ஆரம்பப் பள்ளியில், அதைப் பற்றி எனது ஆசிரியர் கூறி, அதன் படத்தைக் காட்டியது இன்றும் என் நினைவில் உள்ளது. ஒரு பெட்டி மீது வட்டமான கருந்தட்டொன்று. அதன் முனையில் ஒரு நீளமான வாள் போன்ற ஒன்று. அந்தப் பெட்டியின் பக்கத்தில் ஒரு பெரிய குழாய். அந்தத் தட்டு சுழலும்போது, அந்த வாள் அதில் நகரும். அப்போது பாடல் ஒலிக்கும். அது அந்தக் குழாய் வழியே நமக்குக் கேட்கும் என்று அவர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. சில நாட்கள் கழித்து அவர் அந்தக் கருவியை எடுத்து வந்து, எங்களுக்கு இயக்கிக் காட்டிய போது, எதோ காணாத ஒன்றைக் கண்டது போல நாங்கள் மகிழ்ந்தோம். அதை வாங்க வேண்டுமென்று என் வீட்டில் கேட்டபோது, ‘ஒழுங்காய்ப் படிடா. அதுதான் முக்கியம்’ என்று என் அன்னை திட்டினார். பின்னர் உயர்நிலைப் பள்ளியில் அதைப் பற்றிய பாடம் வந்தபோது அதன் ரகசியம் புரிந்தது. அது எவ்வாறு இயங்கி, நமக்கு இசை தருகிறது என்ற விஞ்ஞானமெல்லாம் பற்றி எழுத விருப்பமில்லை. கூகுளைக் கேட்டால் சொல்லி விடும்!

கோவையில் நான் ஏழாவது படிக்கையில், எனது ஆங்கிலோ இந்திய நண்பன் ஒருவன் வீட்டுக்கு, அவனது பிறந்த நாளுக்குச் சென்றபோது, அங்கிருந்த பளபளவென்றிருந்த அந்த வெளிநாட்டுக் கிராமஃபோன் பெட்டியைக் கண்டேன். முதலில் பக்க வாட்டில் இருந்த ஒரு சாவி போன்ற அமைப்பை அவன் முழுவதுமாகத் திருகினான். பின்னர் வெல்வெட் போன்ற ஒன்றின் மேல் அவன் இசைத்தட்டு வைத்து, அதன் மேல் அந்த சிறு முள்ளை ஓரத்தில் வைக்க, இசை துவங்கி, அந்தப் பெரிய குழாய் வழியே துல்லியமாகக் கேட்டபோது இந்திர பதவியையே அடைந்தது போன்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் கிடைத்தது! ஜிம் ரீவ்ஸ் என்ற பாடகர் பாடிய சில ஆங்கிலப் பாடல்கள் கேட்டோம். அதன் பின்னர் எழுபதில். என் ஸ்ரீரங்கம் நண்பன் வீட்டில் பெரிய இசைத் தட்டுகள் மூலம் கேட்ட ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ போன்ற பாகவதர் பாடல்களும், ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற எம்.எஸ்.எஸ் அவர்களின் பாடலும் சுகமாக இருந்தன! வெகு நேரம் பாடல் கேட்டால், சாவியின் அழுத்தம் குறைந்து, பாடல் இழுவையாகி அபஸ்வரமாக ஒலிப்பதைக் கேட்டு சிரிப்போம்.

எழுபதுகளில் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருக்கையில், என் மூத்த சகோதரரின் நவீன கிராமஃபோன் கருவியை என்னிடம் சில ஆண்டுகள் விட்டு வைத்தார். அது பிலிப்ஸ் டர்ன் டேபிள் (Philips Turntable) என்றழைக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் ஒன்று. சிறிய அளவில், மேலே கண்ணாடி மூடியுடன் அமைந்தது. அதில் மூன்று வேகங்களில் (33.1/3, 45, 78 RPM) சுழலக் கூடிய இசைத்தட்டுகளை இயக்கலாம். அப்போது வந்த பல தமிழ், ஹிந்திப் படப் பாடல்கள் மற்றும் Sound of music, Ventures, Temptations, Jim Reeves போன்ற ஆங்கில இசைப் பாடல்களின் இசைத் தட்டுகளை, தஞ்சையில் (சத்தார் ஸ்டோர்) சிறிய தட்டு நான்கு ருபாய், பெரியது எட்டு ரூபாய் என்ற விலையில் வாங்கி உபயோகித்திருக்கிறேன். என் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தால், அந்த இசையைக் கேட்காமல் இருந்ததில்லை. குறிப்பாக ஒரு நண்பன் ஒரே பாடலை சலிக்காமல் ஒரு ஐந்து முறையாவது தொடர்ச்சியாய்க் கேட்டுக் கூடவே பாடுவதும் ஒரு இம்சையான வழக்கம்.

திருமணத்துக்குப் பின், எண்பத்தொன்றில் நான் வாங்கிய எனது முதலும், இறுதியான கிராமஃபோன் அதே பிலிப்ஸின் அன்றைய நவீன கருவியாகும். நாங்கள் சில மாதங்கள் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிகையில், அங்கு இலங்கை வானொலிகூட ஒழுங்காக வராத சூழ்நிலையில், எங்களுக்குக் கை கொடுத்த பொழுது போக்கு தெய்வம் அந்த கிராமபோன்தான். ஏகப்பட்ட நல்ல இசைத்தட்டுகள் இருந்ததால் பிழைத்தோம். பின்னாளில் டேப் ரெக்கார்டர் வாங்கியபின், நான் செய்த தவறு அந்த கிராமபோனை விற்றதுதான். இன்றுவரை என் என் துணைவியார் என்னை அதற்காக மன்னிக்கவேயில்லை! எங்களை நன்கு மகிழ்வித்த அதன் செய்நன்றி மறந்த எனக்கு விமோசனம் உண்டா என்று தெரியவில்லை! ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கைதான் என்றாலும் இன்று நினைக்கையில், அதை இழந்தது ஒரு ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான் என்று தோன்றுகிறது. இன்றும் கிராமஃபோனைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவர்கள் பலர். வாழ்க!

படங்கள் நன்றி: Vinyl mappers

Leave a comment