தொடரும் தொற்று….

இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு, ஜனவரி முப்பத்தொன்றில் ஒரு கேரளப் பெண்மூலம் சீனாவிலிருந்து வந்த கொரோனா, வேண்டாத விருந்தாளியாய் நம் நாட்டில் உட்கார்ந்து கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்பது எந்த சாபத்தாலோ என்று தெரியவில்லை. ஆயினும் மனதைத் தேற்றிக் கொண்டு, அரசு சொன்ன வழிமுறைகளை சரியானபடிக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக, வீட்டுச் சிறைக்குள் எங்களையே பூட்டிக்கொண்டு, போதிய பாதுகாப்புடன் இரண்டு ஆண்டுகளைக் கழித்தது கனவு போல இருக்கிறது.

தினந்தோறும் எத்தனை ஆயிரம் பேர் நோயால் பாதிப்பு, எத்தனை இறப்பு என்று தொலைக்காட்சி செய்தி பார்த்து ‘இன்று நீ, நாளை நானா’ என்ற கேள்வியுடன் தினசரி தூங்கப் போவது வழக்கமாயிற்று. நெருங்கிய உறவினரிடமிருந்து மூன்று நாட்கள் தொலைபேசி அழைப்பு வராவிட்டால் அச்சம் வந்தது. நண்பர்களை அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஊர் நிலவரம் விசாரிப்பது வாடிக்கையாயிற்று. இந்த நெருக்கடி காலத்தில் ஒரு மருத்துவனாக ஊருக்குதவ முடியாமல் போனது வேதனையாயிற்று. ரயில் விபத்துக்கள், புயல்கள், சுனாமி போன்ற இயற்கை மற்றும் செயற்கைச் சீற்ற காலங்களில் மருத்துவம் பார்த்தது நினைவில் நிழலாடிற்று. பதினெட்டாண்டுகளுக்கு முன் கொரோனாவின் முதல் முன்னோடியான ‘சார்ஸ்’ நோயாளிகளுக்கு, முழு உடற்கவசம் அணிந்து, அவதிப்பட்டு, மருத்துவம் பார்த்தது நினைவில் வந்தது. முதல் மற்றும் இரண்டாம் அலைகளில் என்னுடன் படித்த மருத்துவ நண்பர்கள் நால்வரை இழந்தது துயரம்.

நமது பெரியவர்கள் சொல்லித் தந்த நல்ல பழக்கங்கள், இந்த இடர் காலத்தில் கை கொடுத்தது. ஒன்று கை கால்களை சுத்தம் செய்வது, மற்றொன்று தொடாமல் கைகூப்பி வணக்கம் சொல்வது, மேலும், எவரிடமும் தள்ளி நின்று பேசுவது. முகக்கவசம் அணிவது ஒன்றுதான் கூடுதல் சமாச்சாரம். ஆறடுக்கு முகக் கவசங்களை வாங்கி உபயோகப் படுத்தத் தொடங்கியாயிற்று. துஷ்டரை மட்டுல்ல, யாரைக் கண்டாலும் தூர விலகியாயிற்று. நமது மத்திய மாநில அரசுகள் சொன்ன அத்தனை பாதுகாப்பு முறைகளையும் கடைபிடிக்கத் தொடங்கியாயிற்று.

கொரோனா என்பது கொடிய வில்லன் என்றாலும், பல ஏழைகளின் வாழ்வைக் குலைத்த போதும், நல்ல திருப்பங்கள் பலவற்றை குடும்பங்களில் ஏற்படுத்தியதற்காக அதற்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். கணவன்மார்கள் பலர் வீட்டிலிருந்து வேலை செய்ய, அவர்களது சிரமம் மனைவிகளுக்கும், மனைவிகள் வீட்டில் படும் சிரமம் கணவர்களுக்கும் தெளிவாயிற்று. குழந்தைகள் செல்பேசி நேரத்தைக் குறைத்து மற்ற உள் விளையாட்டுகளில் ஈடுபாடு காட்டியது நல்ல மாற்றம். தொலைக்காட்சி பார்ப்பதில் மட்டும்தான் பூகம்பம். இதில் ஜெயித்தவர்கள் மனைவிமார்கள் என்பதே பரவலான செய்தி. தொலைக்காட்சியில் ஐந்து நிமிடங்களுக்கொருமுறை அக்க்ஷய குமார் வந்து ‘ஹார்பிக் கொரோனாவைக் கொல்லும்’ என்று சொல்வது மட்டும் எரிச்சலூட்டும் விஷயம்!

இந்தப் பேரிடர் காலத்தில் சமூக ஊடகங்கள் பலருக்கு உதவின என்றாலும், அவை பரப்பிய வதந்திகள் நம்மூர் குழாயடிப் பெண்களின் வம்புகளைவிட மோசம். ‘ஈரைப் பேனாக்கி’ என்பதைப் போல பொதுஜனம் பலரும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போல, வாய்க்கு வந்ததைப் பேசி, எழுதி, வதைத்தது காலக் கொடுமை. இதில் போதாக்குறைக்கு ‘வேண்டாத மருமகள்’ போல நடத்தப்படும் நம் பிரதமர் எதைச் செய்தாலும் குற்றம் என்று கூவிய எதிர்கட்சிக் கூட்டம் ஒன்று. இதிற்கிடையில் வெளிநாட்டு இடதுசாரி அறிவுஜீவிகள் இந்தியாவே அழிந்துவிடும் என்ற அளவுக்கு பயமுறுத்தும் ஆரூடங்கள் கூறியது தனிக்கதை. இருப்பினும் முதல் அலையை அதிக உயிர்ச் சேதமின்றி சமாளித்ததில் அரசுகளுக்குப் பாராட்டு. வெளிநாட்டினர் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படுமளவு சிறப்பாகக் கையாண்ட அனைவருக்கும் நன்றி சொல்லியே தீரவேண்டும். குறிப்பாக நம்ம ஊர் தடுப்பூசி கொண்டே நோயை எதிர்த்ததும், 160 கோடி ஊசிகள் போடப்பட்டதும் எல்லாம் நிச்சயம் பெரிய சாதனைதான்!

ஒரு மருத்துவனாக எனது கருத்து ஒன்றேதான். ஒரு புதுவிதமான தொற்று நம்மை முதன்முதல் தாக்கும்போது, குறிப்பாக அதற்கேற்ற மருந்துகள் இல்லாதபோது, பலவித ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும். ஆனால் அவையனைத்தையும் ஓரளவுதான் நம்பமுடியும். இதுபோன்ற உலகப் பெருந்தொற்று வந்தால் குறைந்தபட்சம் மூன்று வ்ருட ஒழுங்கான முறையான ஆராய்ச்சிகள் தேவைப்படும். அதற்குமுன் ‘வருமுன் காப்பு’ ஒன்றே வழி. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் இதைத்தான் எல்லா சமூக வலைத் தளங்களிலும் கூறி வந்திருக்கிறேன். இதற்கிடையில் பல நாட்டு வைத்தியங்கள், உணவுமுறை மருத்துவம், சித்தா, யுனானி என்று பலர் போடும் கூச்சல்களில் எனது கருத்து காணாமல் போனதில் வியப்பில்லை. படித்தவர்கள், பாமரர்களைவிட மோசமாக நடந்து கொள்வது வருந்தத்தக்க விஷயம்.

ஒருவழியாக லாக் டவுன் முடிந்து எழுபது விழுக்காடு இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னர் தேர்தல் திருவிழா தொடங்கியது. அதற்குள் தடுப்பூசி வந்தது. மே மாதம் தேர்தலில் புது அரசு வந்தது. எல்லா அரசுகளின் தவறுகளாலும், பொதுமக்களின் அலட்சியத்தாலும் கொரோனா இரண்டாம் அலை பழி வாங்கியது. மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தது கொடுமை. யாரைக் குறை சொல்வது? இவ்வளவு மோசமான ஒரு நோய் நம்மைத் தாக்கியது மட்டுமல்ல, இது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்ற கவலை சிறிதேனுமின்றி, மக்கள் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருந்ததையும் அவர்களில் பாதிப் பேர் முகக்கவசம் வாய்க்கு மட்டும் போடப்பட்டிருந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தபோது, கொரோனா மூன்றாம் அலை வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதியானது. அவ்வாறே இந்த ஆண்டில் கொரோனாவின் புதிய அவதாரமான ‘ஒமிக்ரான்’ மூன்றாம் அலையாக உலகில் வலம் வரத் தொடங்கியாயிற்று. ஆனால் இதுவே பேரிடரின் முடிவுரை என்று தோன்றுகிறது. பார்க்கலாம்!

இரண்டாயிரத்து இருபது, இருபத்தொன்று இரண்டும் சபிக்கப்பட்ட ஆண்டுகள் என்று எந்த ஆரூடமும் ஏன் சொல்லவில்லை?