காணாமல் போனவை 4

ஒலிப்பதிவுப் பெட்டி (Audio recorder) (நாடாப் பதிவு, ஒலிப்பதிவன்)  எழுபதுகளில் தொடங்கி இருபதாண்டுகள் முன்வரை எங்கும் கோலோச்சிய ஒரு அற்புதக் கருவி. இசைப் பிரியர்கள் விரும்பிய இசையை, அவர்கள் செவிகளுக்கு வழங்கிய சாதனம்! பத்தாண்டுகள் முன்னர் பிறந்த குழந்தைகள், இக்கருவியை அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டிய நிலைதான்  இன்று! கடந்த முப்பதாண்டுகளில் விஞ்ஞானம் பற்றும் மின்னணுவியலில் ஏற்பட்ட துரிதமான முன்னேற்றம், கடந்த இரு நூற்றாண்டுகளில் ஆன மாற்றங்களைவிட மிகுதியானவை என்றால் மிகையல்ல. ஒலியின் அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி, ஒரு நாடாவில் சேமித்து அதன்பின் அதை நாம் இயக்குகையில், மின்காந்த அலைகள் மீண்டும் ஒலியலைகளாக நம் செவிகளுக்கு வந்துசேரும் வண்ணம் அமைக்கப்பட்ட இக்கருவி, டேப் ரெக்கார்டர், காஸெட் ரெக்கார்டர் (Tape recorder, cassette recorder) என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.

முதலில் மின்காந்த நாடாவுக்கு பதில் வேறு சில பயன்படுத்தப்பட்டன. முதன் முதல் இத்தகைய கருவிக்குக் காப்புரிமை பெற்றது (1886) அலெக்ஸ்சாண்டர் கிரஹாம் பெல்லின் வோல்டா பரிசோதனைக் கூடம்தான்! ஆனால், ஜெர்மானியர்கள் இத்துறையில் அசுர வேகம் பெற்றுப் பல கருவிகளைக் கண்டுபிடித்த காலத்தில், ஜெர்மனியின் AEG நிறுவனம் 1934ல் மாக்னெட்டோஃபோன் (Magnetophone) என்ற பெயரில் தயாரித்து உலகுக்களித்தது. தொழில் நுட்பம் வளர வளர, பெரிய வடிவில் இருந்த இக்கருவி சுருங்கத் தொடங்கி, பெல்ஜியத்தில் ஃபிலிப்ஸ் நிறுவனம் காம்பாக்ட் கேசட் (Compact cassette) என்ற கைக்கடக்கமான ஒலி நாடாவைக் கண்டுபிடித்து 1962ல் விற்பனைக்கு விட்டனர். ஒலிப்பதிவுக் கூடங்கள் மற்றும் வானொலி நிலையங்களில் பெரிய அளவு ஸ்பூல் டேப் (Spool tape) பயன்பாட்டில் இருக்கும். வீடுகளில் அத்தகைய கருவிகளை வைத்திருந்தவர்களும் அந்நாளில் உண்டு.

ஐம்பதுகளுக்குப்பிறகு ஜப்பானிய நிறுவனங்கள் இந்த ஒலிநாடா உலகை ஆளத் தொடங்கிவிட்டனர். சோனி (Sony), சான்யோ (Sanyo), அக்காய் (Akai), பானாசோனிக் (Panasonic) டிடிகே (TDK) போன்ற நிறுவனங்கள் இத்தகைய கருவிகளை சந்தையில் வெள்ளமென ஓடவிட்டனர். சோனியின் வாக்மான் (Walkman) என்ற கைக்கடக்கமான ஒலிக்கருவி மிகவும் உலகப் புகழ் பெற்றது. முதலில் அனலாக் (analogue – ஒப்புமை) வடிவில் எல்லாப் பக்கமும், ஒரே அளவு கேட்கும் ஒலிகளைத்தான் இந்தக் கருவிகள் தந்தன. அதன் பின்னர் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், இருபக்கமும் இருவித ஒலியலைகளைக் கேட்கும் ஸ்டீரியோ (stereo) வந்தது. தற்போது முப்பரிமாணத்தில் நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் ஒலிகேட்கும் தொழில் நுட்பம் Dolby surround, Atmos, DTS, என்றெல்லாம் வந்துவிட்டன. ஆனால் இவையெல்லாம் வருமுன்னரே இக்கருவி மறைந்துவிட்டது சோகம்!

நான் முதன் முதல் (1980) வாங்கிய நாடாப் பெட்டி தனியானதல்ல. ஒன்றில், இரண்டு (Two-in-one) என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வானொலி மற்றும் ஒலி நாடாக்கருவி. Akai என்ற ஜப்பானிய நிறுவனத்தினுடையது. அப்போது ஒலி நாடாக்கள் C60, C90 என்ற இரு வடிவங்களில் வரும். முறையே அறுபது மற்றும் ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியவை. ஒரு பக்கம் முடிந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தைக் கேட்கவேண்டும். இதில் C60 நாடாவை வாங்குவது உத்தமம்; C90 அடிக்கடி சிக்கிக்கொள்ளும் என்று வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் நான் C90 நாடாக்களைத்தான் அதிகம் பயன்படுத்தியுள்ளேன். இந்த நாடாக்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து அதனை நிறுவனங்களுக்கும் வழங்கிய ஜப்பானிய நிறுவனம் டிடிகே (TDK) ஆகும். இத்தகைய ஓலி நாடாக்கள் பல இசை நிறுவனங்களால் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, துல்லியமான இசையுடன் வரும். மேலும், பல சிறிய கடைகளில் நாம் விரும்பும் பாடல்களை அவர்கள் ஒலிப்பதிவு செய்தும் தருவார்கள். நமது வானொலி ஃஎப். எம் அலைவரிசையில் வரும் பிடித்த பாடல்களை நாமே பதிவு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. (எனது மகன் குழந்தையாய் இருந்தபோதிலிருந்து அவனது பத்து வயதுவரை அழுத, பேசிய, பாடிய குரல்களைப் பதிவு செய்த நாடாவை இன்றும் வைத்திருக்கிறேன்). இரவில், மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு, பி.சுசீலா, ஜானகி, ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரின் மெல்லிசையை இக்கருவி வழியே ரசித்த காலங்கள் மீண்டும் வாராது! தொண்ணூறுகளில் சென்னையில் வந்து அடைக்கலமானவுடன். ஸ்டீரியோ ரெக்கார்டர் வாங்கி இசை ஞானியின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தது ஒரு கனவுக்காலம். இருப்பினும், இன்றும் என் இதயத்தை வருடுவது தொழில் நுட்பம் குறைவான காலத்தில் (1950 – 1980) வந்த ஹிந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களே!

ஒலி நாடாவின் மகத்துவம் குறைந்தது, அடுத்த கண்டுபிடிப்பான ஒலித்தட்டு (Compcat disc-CD) வந்த பின்புதான். இதில் இசையின் துல்லியம் இன்னும் அதிகம். பல நிறுவனங்கள் ஒன்றில் மூன்று (3 in 1 – Radio, tape recorder & CD player) வடிவில் புதுக்கருவியை அறிமுகம் செய்தனர். பிறகு அதுவே ஒன்றில் ஐந்து (5 in 1) ஒன்றில் ஏழு (7 in1) என்று அவியல் கணக்கான வடிவங்களில் வந்து விரைவிலேயே காணாமலும் போயின! ஒலிப்பதிவு போல நாடாவில் ஒளிப்பதிவும் (compact video) பெற்று வந்த வீடியோ கருவிகள் சந்தைக்கு வந்தபோது நடந்தவை இவை!

என் மகனுக்கு நான் பரிசளித்த ஃபிலிப்ஸின் ஒன்றில் ஐந்து (5 in 1) கருவியை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். அவ்வப்போது அதில் என்னிடமுள்ள காஸட் டேப் மற்றும் டிஸ்க் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்வதுண்டு. கிராமபோன் விற்றதைப்போல இதையும் விற்றிருந்தால், என் துணையார் என்னை விவாகரத்து செய்திருந்தாலும் வியப்பதற்கில்லை இப்போது என்னிடம் வீடியோ காஸட் பிளேயர் (VCR), டிவிடி பிளேயர் (DVD), ப்ளூ ரே பிளேயர் (Blu-Ray), மற்றும் நூற்றுக்கணக்கான audio cassette tapes, video tapes, DVDs, Blu-ray discs எல்லாம் பரணில் ஓய்வெடுக்கின்றன. என் மகனின் சந்ததியர், இவற்றைக் காட்சிப் பொருளாகவும், பாட்டன் சொத்தாகவும் பாதுகாத்தால் மகிழ்வேன்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றியுடன்!

  1. Magnetophone
  2. Spool tape recorder
  3. Two in one Mono
  4. Akai two in one stereo
  5. Philips five in one stereo

காணாமல் போனவை 3

தட்டச்சுக் கருவி (Typewriter) என்பதை இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்தில் டைப்பிஸ்ட், டைப்ரைட்டர் என்று தமிழில்(!) சொன்னால்  அனைவரும் அறிவோம். பல மக்களுக்கு வாழ்க்கை தந்த ஒரு அற்புதக் கருவி அது. இக்கருவியை, பலர் விதவிதமான முறைகளில் உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர் என்பது வரலாறு. 1575ல் இத்தாலியில் பிரான்செஸ்கோ (Francesco) என்பவர் முதலில் கண்டுபிடித்த கருவி இது. 1829ல் தொடங்கி அடுத்த நாற்பதாண்டுகளில் பலர் பலவிதமான தட்டச்சுக் கருவிகளுக்கு உரிமம் பெற்றிருந்தனர் என்பது வியப்பு!

மிகவும் வெற்றிகரமாக முதலில் உரிமம் பெற்ற கருவியை 1868ல் கிறிஸ்டோபர் சோல்ஸ்  (Christopher Latham Sholes) என்ற அமெரிக்கர் விற்பனைக்குக் கொண்டு வந்தார். அந்தக் காலகட்டத்தில் தையல் கருவிகள் விற்று வந்த ரெமிங்டன் (Remington) நிறுவனம் முதல் கருவியை QWERTY விசைப் பலகையுடன் (key board) சந்தையில் விட்டது. அன்று முதல் அத்தகைய கருவிகள் பிரபலமாயின. இந்தியாவுக்கு இக்கருவி 1940ல் அறிமுகமானது. அப்போது வெளிநாட்டுக் கருவிகளே இங்கு வந்தன. 1955ல் இந்திய காட்ரெஜ் (Godrej) நிறுவனம் இந்தியாவிலேயே இதைத் தயாரித்தது. Remington, Underwood, Brother, Godrej ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி தயாரிப்பதில் உலகப் புகழ் பெற்றன.

அத்தனை ஆவணங்களையும் கைகளால் எழுதி சேமித்த காலத்தில், இத்தகைய கருவி ஒரு வரப்பிரசாதமாக வந்ததில் வியப்பில்லை! ஆனால் இதைப் பயன்படுத்த, பயிற்சி தேவைப்பட்டது. ஐம்பதுகளின் இறுதியில், இங்கு பல தட்டச்சுப் பயிற்சி நிலையங்களும், இக்கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு லோயர், ஹையர் என்ற இருகட்டத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் வென்றவர்களுக்கு அந்நாளில் அரசு வேலை கிடைப்பது எளிது என்பதால் மக்கள் இப்பயிற்சி பெற அதிக ஆர்வம் காட்டினர்.

நான் பள்ளியில் படித்த காலத்தில், பட்டி தொட்டியெல்லாம் இந்தத் தட்டச்சுக் கூடங்கள் பல வீதிகளில் இருந்தன. நான் படித்த கிராமத்தில், என் வீட்டருகே ஒரு பயிற்சி நிலையத்தை ஒரு வேலையில்லா இளைஞர் துவக்கினார். எனது ஆர்வத்தால், நான் அதில் சேர்ந்து பயிற்சி பெறத் துடித்தேன். என் அம்மாவின் சிறுவாட்டுப் பணத்தில் மாதம் மூன்று ருபாய் கட்டணம் கட்டி, அதில் சேர்ந்தேன். காலை ஏழு முதல் எட்டு வரை பயிற்சி. அந்த பத்துக்குப் பத்து அறையில் மூன்றே மேசைகளும், ஸ்டூல்களும் இருக்கும். காலையில் நான் செல்லும் நேரத்தில், நான் ஒருவன் மட்டுமே. எனது பயிற்சி ஆசான் எனக்கு நன்கு சொல்லித் தந்தார். நாள்தோறும் asdfgf ;lkjhj asdfgf ;lkjhj என்று தொடங்கி ஒரு பேப்பர் முழுவதும் டைப் அடிக்கையில் விரல்கள் கெஞ்சும். ஆனால் கொஞ்ச நாட்களில் பழகிவிட்டது! ஒரு உண்மையைச் சொல்கிறேன். எனது மிகக் குறுகிய நாட்களின் அனுபவத்தில், டைப் ரைட்டரில் அடிக்கும்போது ஏற்படும் ஓசை, ஒருவித போதை ஏற்படுத்தும் சாதனம்! துவக்க நாட்களில் டொக்கு டொக்கு என்று வேகமாக விசைகளைத் தட்டுகையில் ஏற்படும் நாராச ஒலி மறைந்து, நாம் விரைவாகத் தட்டச்சு செய்யும் நேர்த்தியை அடைந்தவுடன், வேகமாகக் கேட்கும் அந்த தாளத்தை, மெல்லிசை மன்னர் போல் ஒருவரிடம் தந்தால், அற்புதமான மெட்டமைத்திருப்பார்!

பிறகு ஒரு நல்ல நாளில், பள்ளியில் எனது ஜுனியரான ஷ்யாமளா என்ற பெண், நான் செல்லும் நேரத்தில் அவளும் பதிவு செய்தாள். பாவாடை தாவணியில், இரட்டை ஜடையுடன் அவள் வருகையில் அந்த சிறு அறையே பிரகாசமானது என்றுதான் சொல்ல வேண்டும்! என் ஆசானின் தோற்றத்திலும் உடையலங்காரத்திலும் பல மாற்றங்கள் கண்கூடாகத் தெரிந்தது. என் ஆசான் என்னைப் பார்த்து, ‘நீ நன்கு தேறி விட்டாய். இப்பெண்ணுக்குத்தான் உதவி தேவை’ என்று சேவையில் இறங்கினார். அடுத்த மாதம் மிச்சமிருந்த ஒரு மேசைக்கு, என் பள்ளி மாணவர்களிடையில் பலத்த போட்டி. ஒரு நாற்பது நாட்கள் எங்கள் பயிற்சிக்கூடம் கலகலவென இருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, ஒருநாள் திடீரென அப்பெண் பயிற்சியிலிருந்து நின்று விட்டாள். மீண்டும் நான் தனி ஒருவனானேன்! ஒரு வழியாக, லோயர் தேர்வு எழுதும் அளவுக்குப் பயிற்சி பெற்றேன். தேர்வுக்குப் பணம் கட்ட எனது அண்ணனிடம் கேட்டபோது, ‘நீ மருத்துவர் ஆகப்போவதாகச் சொன்ன ஞாபகம்! பின்னர் ஏன் டைப்பிஸ்ட் ஆக நினைக்கிறாய்? கற்றவரை போதும், ஒழுங்காகப் பாடங்களைப் படி’ என்று நிறுத்தி விட்டார்.

எனது அனுபவம் போல அந்நாளில் பலருக்கும் இருந்திருக்கும். பல பயிற்சி நிலையங்களில் பல ஜோடிகள் உருவான கதைகள், திரைப் படங்களிலும், நிஜ வாழ்விலும் உண்டு. இத்தகைய கூடங்களில் பயிற்சி பெற்றவர்கள் பலருக்கு, அரசு மற்றும் தனியார் வேலைகள் கிடைத்தன. இதனுடன் சுருக்கெழுத்து (Shorthand) கலையையும் கற்றுத் தேறினால், வேலை வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்பது அந்தகால விதி. பள்ளி முடித்துப் பின்னர் கல்லூரிக்குச் செல்ல வாய்ப்பில்லாதவர்க்கு இக்கருவிப் பயிற்சி நல்ல வாழ்வாதாரம் தந்தது உண்மை! பார்பரா ப்ளாக் பர்ன் (Barbera Blackburn) என்ற அமெரிக்கப் பெண்மணிதான் உலகிலேயே மிகவும் வேகமாக தட்டச்சு செய்யக்கூடியவர் (நிமிடத்துக்கு 170 சொற்கள்) என்ற சாதனையை நீண்ட காலம் வைத்திருந்தார், அவரே பின்னாளில் (2005) ஆப்பிள் கணினியில் நிமிடத்துக்கு 200 சொற்கள் அடிக்க முடியும் என்று நிரூபித்தார். உலகிலேயே வேகமாக டைப் செய்யக்கூடிய சிறுவன் (13 வயது) பட்டியலில், நம் நாட்டு அபிஷேக் ஜெயின் என்ற மாணவன்தான் முதலிடம்! (நிமிடத்துக்கு 109 சொற்கள்). 
இதன் பரிணாம வளர்ச்சியாகப் பின்னாளில் மின்சார எலக்ட்ரானிக் கருவிகள் (Electronic typewriter) வந்தன. பிறகு கணினிகள் பயன்பாட்டுக்கு வந்தபோது இந்தப் பழைய கருவிகள் ஓய்வு பெற்றன என்றுதான் சொல்ல வேண்டும். அந்நாளைய கருவியின் அடிப்படை QWERTY விசைப் பலகைதான் கணினியில் பயன்படுத்தப்படுகின்றன என்பது சிறப்பு. இப்போது வாயால் நாம் சொன்னாலே போதும், கணினி தானாகவே எழுதிக் கொள்ளும் வண்ணம் தொழில் நுட்பம் வந்து விட்டதால், இன்னும் சில ஆண்டுகளில் தட்டச்சு என்பது தொல்பொருள் ஆகிவிடும் என்றுதான் தோன்றுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் மனதில் நினைப்பதைக்கூட சொல் வடிவங்களாகக் கணினி காட்டிவிடும் நாள் தொலை தூரத்தில் இல்லை.
இருப்பினும், இரு நூற்றாண்டுகள் கோலோச்சிய இந்தத் தட்டச்சுக் கருவி மனித வளர்ச்சியிலும், வாழ்வாதாரத்திலும், தொடர்பு சாதனம் என்ற முறையிலும் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டு மறக்க முடியாதது. இவற்றின் மூலம் எழுத்து அச்சுகள் நிறைந்த பல ஆவணங்கள், இன்றும் உலகின் பல்வேறு அலுவலகங்களின் சேமிப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளன. பல அந்நாளைய டைப்பிஸ்ட்டுகள் தங்கள் கருவியை, இன்னும் குழந்தை போலப் பாதுகாப்பதைப் பார்க்கையில், மனம் நெகிழத்தான் செய்கிறது. ஆனால், கால மாற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்!
வழக்கமான பல்லவிதான்: பழையன கழிதலும்……

படங்கள்: இணையத்திலிருந்து நன்றியுடன்.

1. Sholes – Gliddon typewriter
2. Godrej Typewriter
3. Brother electronic typewriter.
4. Typewriting institute

காணாமல் போனவை 2

கிராமஃபோன் என்பது நான் சிறுவயதில் கேள்விப்பட்ட ஒரு பாடல் பாடும் கருவி. என் ஆரம்பப் பள்ளியில், அதைப் பற்றி எனது ஆசிரியர் கூறி, அதன் படத்தைக் காட்டியது இன்றும் என் நினைவில் உள்ளது. ஒரு பெட்டி மீது வட்டமான கருந்தட்டொன்று. அதன் முனையில் ஒரு நீளமான வாள் போன்ற ஒன்று. அந்தப் பெட்டியின் பக்கத்தில் ஒரு பெரிய குழாய். அந்தத் தட்டு சுழலும்போது, அந்த வாள் அதில் நகரும். அப்போது பாடல் ஒலிக்கும். அது அந்தக் குழாய் வழியே நமக்குக் கேட்கும் என்று அவர் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. சில நாட்கள் கழித்து அவர் அந்தக் கருவியை எடுத்து வந்து, எங்களுக்கு இயக்கிக் காட்டிய போது, எதோ காணாத ஒன்றைக் கண்டது போல நாங்கள் மகிழ்ந்தோம். அதை வாங்க வேண்டுமென்று என் வீட்டில் கேட்டபோது, ‘ஒழுங்காய்ப் படிடா. அதுதான் முக்கியம்’ என்று என் அன்னை திட்டினார். பின்னர் உயர்நிலைப் பள்ளியில் அதைப் பற்றிய பாடம் வந்தபோது அதன் ரகசியம் புரிந்தது. அது எவ்வாறு இயங்கி, நமக்கு இசை தருகிறது என்ற விஞ்ஞானமெல்லாம் பற்றி எழுத விருப்பமில்லை. கூகுளைக் கேட்டால் சொல்லி விடும்!

கோவையில் நான் ஏழாவது படிக்கையில், எனது ஆங்கிலோ இந்திய நண்பன் ஒருவன் வீட்டுக்கு, அவனது பிறந்த நாளுக்குச் சென்றபோது, அங்கிருந்த பளபளவென்றிருந்த அந்த வெளிநாட்டுக் கிராமஃபோன் பெட்டியைக் கண்டேன். முதலில் பக்க வாட்டில் இருந்த ஒரு சாவி போன்ற அமைப்பை அவன் முழுவதுமாகத் திருகினான். பின்னர் வெல்வெட் போன்ற ஒன்றின் மேல் அவன் இசைத்தட்டு வைத்து, அதன் மேல் அந்த சிறு முள்ளை ஓரத்தில் வைக்க, இசை துவங்கி, அந்தப் பெரிய குழாய் வழியே துல்லியமாகக் கேட்டபோது இந்திர பதவியையே அடைந்தது போன்ற மகிழ்ச்சி எங்கள் எல்லோருக்கும் கிடைத்தது! ஜிம் ரீவ்ஸ் என்ற பாடகர் பாடிய சில ஆங்கிலப் பாடல்கள் கேட்டோம். அதன் பின்னர் எழுபதில். என் ஸ்ரீரங்கம் நண்பன் வீட்டில் பெரிய இசைத் தட்டுகள் மூலம் கேட்ட ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ போன்ற பாகவதர் பாடல்களும், ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற எம்.எஸ்.எஸ் அவர்களின் பாடலும் சுகமாக இருந்தன! வெகு நேரம் பாடல் கேட்டால், சாவியின் அழுத்தம் குறைந்து, பாடல் இழுவையாகி அபஸ்வரமாக ஒலிப்பதைக் கேட்டு சிரிப்போம்.

எழுபதுகளில் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருக்கையில், என் மூத்த சகோதரரின் நவீன கிராமஃபோன் கருவியை என்னிடம் சில ஆண்டுகள் விட்டு வைத்தார். அது பிலிப்ஸ் டர்ன் டேபிள் (Philips Turntable) என்றழைக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் ஒன்று. சிறிய அளவில், மேலே கண்ணாடி மூடியுடன் அமைந்தது. அதில் மூன்று வேகங்களில் (33.1/3, 45, 78 RPM) சுழலக் கூடிய இசைத்தட்டுகளை இயக்கலாம். அப்போது வந்த பல தமிழ், ஹிந்திப் படப் பாடல்கள் மற்றும் Sound of music, Ventures, Temptations, Jim Reeves போன்ற ஆங்கில இசைப் பாடல்களின் இசைத் தட்டுகளை, தஞ்சையில் (சத்தார் ஸ்டோர்) சிறிய தட்டு நான்கு ருபாய், பெரியது எட்டு ரூபாய் என்ற விலையில் வாங்கி உபயோகித்திருக்கிறேன். என் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தால், அந்த இசையைக் கேட்காமல் இருந்ததில்லை. குறிப்பாக ஒரு நண்பன் ஒரே பாடலை சலிக்காமல் ஒரு ஐந்து முறையாவது தொடர்ச்சியாய்க் கேட்டுக் கூடவே பாடுவதும் ஒரு இம்சையான வழக்கம்.

திருமணத்துக்குப் பின், எண்பத்தொன்றில் நான் வாங்கிய எனது முதலும், இறுதியான கிராமஃபோன் அதே பிலிப்ஸின் அன்றைய நவீன கருவியாகும். நாங்கள் சில மாதங்கள் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிகையில், அங்கு இலங்கை வானொலிகூட ஒழுங்காக வராத சூழ்நிலையில், எங்களுக்குக் கை கொடுத்த பொழுது போக்கு தெய்வம் அந்த கிராமபோன்தான். ஏகப்பட்ட நல்ல இசைத்தட்டுகள் இருந்ததால் பிழைத்தோம். பின்னாளில் டேப் ரெக்கார்டர் வாங்கியபின், நான் செய்த தவறு அந்த கிராமபோனை விற்றதுதான். இன்றுவரை என் என் துணைவியார் என்னை அதற்காக மன்னிக்கவேயில்லை! எங்களை நன்கு மகிழ்வித்த அதன் செய்நன்றி மறந்த எனக்கு விமோசனம் உண்டா என்று தெரியவில்லை! ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கைதான் என்றாலும் இன்று நினைக்கையில், அதை இழந்தது ஒரு ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான் என்று தோன்றுகிறது. இன்றும் கிராமஃபோனைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவர்கள் பலர். வாழ்க!

படங்கள் நன்றி: Vinyl mappers

காணாமல் போனவை 1

ஒலிபரப்புத் துறையில் முன்னோடி என்றால், அந்நாளைய வானொலியைச் சொல்லலாம். மார்க்கோனி என்ற இத்தாலியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடித்தார் என்று பள்ளியில் படித்திருக்கிறோம். அந்நாளில் பல நடுத்தர வர்க்கத்தினர் வீடுகளில் ஒரு வானொலி (ரேடியோ) நிச்சயம் இருக்கும். முதலில் வந்தவை வால்வ் ரேடியோக்கள். ஒரு சிறிய பெட்டி வடிவில், இரு பக்கமும் திருகுவதற்குக் குமிழ்கள் வைக்கப்பட்டிருக்கும். கீழே வரிசையாக அழுத்தும் வண்ணம், பட்டன்கள் இருக்கும். வெவ்வேறு அலைவரிசைக்கேற்ப அந்த பட்டன்களை அழுத்தி விட்டு, வானொலி நிலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வானொலி நிலயத்திடம் வருகையில், பெட்டியின் மேல் பக்கம் ஒரு சிறிய கண்ணாடித் திரையில் பச்சை வண்ணம் ஒளிர்ந்து இணையும். பின்னர் பாடல்கள் வருகையில் அந்தப் பச்சைவண்ணம் அதற்கேற்ப நடனமாடுவதும் உண்டு.

அறுபதுகளில், இத்தகைய வானொலிப் பெட்டி வீட்டில் இருந்தால், அவர்களுக்கு சமூக மதிப்பீடு சற்றுக்கூடும். அந்நாளைய பொழுதுபோக்கு சாதனங்களில் இது இன்றியமையாத இடத்தில் இருந்தது உண்மை. அதிக செலவின்றி வீட்டுக்குள்ளேயே பொழுது போக்க இதைவிடச் சிறந்த சாதனம் அந்நாளில் இல்லை. இதை வைத்திருக்க, ஆண்டுதோறும் அரசிடமிருந்து தபால் நிலையம் வழியே உரிமம் பெற வேண்டியது கட்டாயம்! அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் ரேடியோ சிலோன் என்ற வானொலி நிலையங்கள் மிகவும் புகழ் பெற்றவை. மத்திய அலை வரிசையில் நம்ம ஊர் வானொலி நிலையங்களையும், சிற்றலை வரிசையில் இலங்கை வானொலியையும் கேட்டு மகிழ்வோம். (சில வேளை, பருவநிலை வேறுபாட்டால் சிறிய அலைவரிசைக்குத் தொண்டை கரகரக்கும் நிலை ஏற்படும்)!

நாடகங்கள், தமிழ்ப் படங்களின் ஒலிச் சித்திரம், திரை கானங்கள், வானொலி அண்ணாவின் சிறுவர் நிகழ்ச்சிகள், கிரிக்கெட் வர்ணனை போன்றவற்றை நம்மூர் வானொலியிலும், இலங்கை வானொலியில் நட்சத்திரங்கள், தலைவர்கள் போன்றோரது பேட்டிகள், நமது தமிழ்ப் பாடல்கள் (மிகவும் பழையன கூட) மயில் வாகனன் போன்ற ரேடியோ ஜாக்கியின் அற்புதமான வர்ணனைகளுடன் கேட்டு மகிழ்ந்த அது ஒரு கனாக்காலம்! இலங்கை வானொலி நம் தமிழ்த் திரைப்படங்களையும், கலைஞர்களையும் நினைகூர்ந்து பாராட்டி, ஒலிபரப்பிய நிகழ்ச்சிகள் அளவுக்கு, நம் வானொலிகள் செய்யவில்லை என்பது ஒரு குறைதான். புதன்கிழமைதோறும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பப்பட்ட ஹிந்திப் பாடல்களின் தொகுப்பான ‘பினாக்கா கீத் மாலா’ (Binacca Geet Maala) என்ற நிகழ்ச்சியின் அமைப்பாளர், திரு அமீன் சயானியின் குரலுக்கும் வர்ணனைக்கும் மயங்காதார் அந்நாளில் இருந்ததாக எனக்கு நினைவில்லை! (அண்மையில் மரித்த அவரது ஆத்மாவுக்கு அஞ்சலி)!

பின்னர் எழுபதுகளின் துவக்கத்தில், டிரான்சிஸ்டர் எனப்படும் பாட்டரி வசதியும், கையில் தூக்கிச்செல்லும் வசதியும் கொண்ட ரேடியோ சாதனம் இந்தியாவுக்கு வந்த பின்னர், அவற்றின் விலையும் குறைந்து பல நிறுவனங்களின் தயாரிப்புகள் சந்தைக்கு வந்தன. மர்ஃபி ரேடியோ விளம்பரத்தின், அந்தக் குழந்தை முகத்த்தை யாரேனும் இன்றுவரை மறந்திருப்போமோ? நான் வாங்கிய (1976) முதல் ட்ரான்ஸிஸ்டர் பிலிப்ஸ் (Philips) நிறுவனத்துடையது. எஃப்.எம் (FM) அலைவரிசை வருமுன்னரே அதைக் கொண்ட ட்ரான்ஸிஸ்டர் அது. அறுநூறு ரூபாய்க்கு நான் வாங்கியதாக நினைவு. அதில், இந்திய விவித பாரதி வர்த்தக சேவையின் ‘தேன் கிண்ணம், உங்கள் விருப்பம்’ போன்ற பல நிகழ்ச்சிகளையும், இலங்கை வானொலி அப்துல் ஹமீதின் அழகிய தமிழையும், கே.எஸ். ராஜாவின் குறும்பான தொகுப்புகளையும், ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் கணீர் என்ற குரலில் பல நிகழ்வுகளையும், கல்லூரிக் காலத்தில் கேட்டு மகிழ்ந்ததெல்லாம் இன்று ஒரு கனவு போல நெஞ்சில் எழுகிறது!

அதன்பின் வந்த பல பொழுதுபோக்கு சாதனங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டாலும், காரிலோ, கைபேசியிலோ எதோ ஒரு வடிவத்தில் வானொலி இன்றும் ஜீவித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியே. இருப்பினும், இப்போது அதில் எஃப். எம் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் வாய் வலிக்கப் பேசுவதையும், அவர்களின் மொக்கையான நகைச்சுவை இம்சைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாததால், அவற்றை நான் அதிகம் பயன்படுத்துவதில்லை. வசதி குறைவான காலத்தில், கஷ்டப்பட்டுக் காசு சேர்த்து வாங்கிய வானொலியின் மதிப்பும் அது தந்த சுகமான நினைவுகளும், அதன் அருமை புரிந்த என்னைப் போன்றோர்க்குத் தெரியும். இன்று கைக்கெட்டும் நிலையில் எல்லாம் கிடைத்தாலும், old is gold என்றுதான் மனம் அசை போடுகிறது!